சென்னை: தமிழ்நாடு சைபர் கிரைம் காவல் துறையினர் லோரன்ஸ் ரான்சம்வேர் (Lorenz Ransomware) எனும் புதிய வைரஸ் குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர். இந்த வைரஸ் கோப்புகளை (files) முடக்கி, அதனை மீட்டெடுக்க பணம் கோரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, பெரு நிறுவனங்களின் வணிகக் கோப்புகளை முடக்குவதால் வேறு வழியின்றி பணம் செலுத்தி கோப்புகளை மீட்டெடுக்க நேருகிறது.
இந்த வைரஸ் எந்தவொரு கணினியையும் பாதிக்கும் என்பதால் தேவையற்ற வலைதளங்களை பார்வையிடுவது, லிங்குகளை கிளிக் செய்வது, வலைதளப் பயன்பாட்டில் இருக்கும்போது தேவையற்ற விளம்பரங்களை பார்வையிடுதல் போன்றவற்றை செய்வதால் இந்த வைரஸ் கணினியை தாக்குவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
உலக அளவில் பெரு நிறுவனங்களிடம் இதுபோல் லட்சக்கணக்கில் டாலர்கள் கோரப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஃபிஷ்ஷிங் இ-மெயில்கள் (phishing e-mail) மற்றும் ஸ்பாம் இ-மெயில்கள் (spam e-mail) உள்ளிட்டவை மூலமாக கணினிகளுக்கு பரப்பப்பட்டு, வலை பின்னல் முறையில் இணைக்கப்பட்டுள்ள மற்ற கணினிகளுக்கும் இந்த வைரஸ் பரவுகிறது.