தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

தம்பதி தற்கொலை: குழந்தையின்மைதான் காரணமா? - சென்னை குற்றம்

சென்னை மந்தவெளியில் மன உளைச்சல் காரணமாக கணவன், மனைவி இருவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனர். சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

தம்பதி தற்கொலை
தம்பதி தற்கொலை

By

Published : Jun 24, 2021, 8:17 AM IST

சென்னை: தம்பதி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மந்தைவெளி ஆண்டிமன்ய தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர்கள் லோகநாதன் (55), சாந்தி (48) தம்பதி. லோகநாதன் கார் டிங்கரிங் பணி செய்துவருவதுடன், மனைவியுடன் இணைந்து பால் வியாபாரமும் செய்துவந்தார்.

இவர்களுக்குத் திருமணமாகி 25 ஆண்டுகளான நிலையில் குழந்தை இல்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகப் பல ஆண்டுகளாக மன உளைச்சலில் இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது.

நண்பருக்கு குறுஞ்செய்தி

இந்நிலையில் நேற்று மாலை லோகநாதன் தனது நண்பரான தனபாலுக்கு, தாங்கள் இருவரும் பெரும் மன உளைச்சலில் இருந்துவருவதால் தற்கொலை செய்துகொள்ளப்போவதாகவும், தங்களை ஒரே குழியில் புதைத்துவிடுமாறும் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த தனபால் உடனடியாக லோகநாதன் வீட்டிற்கு விரைந்துசென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது லோகநாதனும் சாந்தியும் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்திருந்தனர். மேலும் வளர்த்த நாயின் முகத்தை நெகிழிப் பையால் மூடியிருந்தனர்.

காவல் துறை விசாரணை

இதனையடுத்து செய்வதறியாது திகைத்த தனபால் இச்சம்பவம் தொடர்பாக அபிராமபுரம் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் தம்பதியின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், தம்பதியரின் தற்கொலைக்கு குழந்தையின்மையால் ஏற்பட்ட மன உளைச்சல்தான் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details