சென்னை:சென்னை கோடம்பாக்கம் பகுதியில் தனியார் காப்பீட்டு நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இதில் ஏப்ரல் 21ஆம் தேதி கடன் வாங்கித்தர மறுத்ததால் அந்த நிறுவனத்தின் ஊழியரான பால் ஜோசஃப் என்பவரை அயனாவரத்தைச் சேர்ந்த பிரதியுன் கிரிதரன்(31), சுவேதா(31) தம்பதிகள் கடத்திச் சென்றுவிட்டதாக, அந்நிறுவன உரிமையாளர் பிரணவ் கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மேலும், உரிமையாளர் பிரணவைத் தம்பதியர் மிரட்டும் ஆடியோ பதிவுகளை அவர் காவல் துறையினரிடம் ஒப்படைத்தார். இதனையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
ஆனால் புகார் அளித்த சற்று நேரத்திற்குப் பின் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பால் ஜோசஃப் திரும்பி வந்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, கடந்த 22ஆம் தேதி சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த பிரதியுன் கிரிதரன், சுவேதா தம்பதியினர் தாங்கள் யாரையும் கடத்தவில்லை எனவும், காப்பீட்டு நிறுவனம்தான் தங்கள் பணத்தை மோசடி செய்ததாகவும், தங்கள் பணத்தை திரும்ப அளிக்கக்கோரியே ஊழியர் பால் ஜோசஃபை அழைத்துச் சென்றதாகவும் தெரிவித்திருந்தனர்.