சென்னை:தடகள பயிற்சியாளரான அபிஷேக் சென்னை திருவல்லிக்கேணியில் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம்தான் (ஏப். 25) அப்பகுதிக்கு குடிவந்த நிலையில், நேற்று (ஏப். 26) அதிகாலை இவரது வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருடப்பட்டது.
காலை தனது இருசக்கர வாகனம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அபிஷேக், திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வாய்மொழியாகப் புகார் அளித்தார். அதனடிப்படையில், சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் அங்கு உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அடையாளம் காணப்பட்ட குற்றவாளிகள்: அதில், இருவர் அதிகாலை நேரத்தில் ஒரு இருசக்கர வாகனத்தில் வந்து அப்பகுதியை நோட்டமிட்டு, பின் ஒருவர் நிறுத்தி வைக்கப்பட்ட இருசக்கர வாகனத்தின் பூட்டை உடைப்பதும், மற்றொருவர் ஆள் நடமாட்டத்தை கவனித்து திருட உதவி செய்வதும், அந்த வாகனத்தை லாவகமாக திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. சிசிடிவி காட்சிகளை வைத்து காவலர்கள் அபிஷேகிடம், இவர்கள் வழக்கமாக திருடும் திருவொற்றியூரைச் சேர்ந்த குற்றவாளிகள் என்பதை எடுத்துரைத்து, இருசக்கர வாகனத்தை மீட்டுத் தருவதாகவும் உறுதியளித்துள்ளனர்.