தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

மூதாட்டி மீது கார் ஏற்றிவிட்டு நாடகமாடிய பயிற்சி மருத்துவர் கைது - Kasimedu

ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் மூதாட்டி மீது காரை ஏற்றி கொன்றுவிட்டு நாடகமாடிய பயிற்சி மருத்துவர் கைது செய்யப்பட்டார்

ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை
ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை

By

Published : Aug 12, 2022, 8:59 PM IST

சென்னை: காசிமேடு பகுதியைச் சேர்ந்தவர் லூசியா(75). மனநலம் பாதிக்கப்பட்ட இவர் அடிக்கடி அவரது வீட்டில் இருந்து காணாமல் போவதை வழக்கமாக கொண்டவர் எனக்கூறப்படுகிறது. இந்தச்சூழலில், கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி இரவு 11.30 மணியளவில், மூதாட்டி லூசியா விபத்தில் படுகாயமடைந்து ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து தகவலறிந்த ராஜிவ் காந்தி மருத்துவமனை காவல் துறையினர், மருத்துவமனை ஊழியர்களிடம் நடத்திய விசாரணையில், மூதாட்டி லூசியா பல்லாவரத்தில் பேருந்திலிருந்து இறங்கும்போது கீழே தவறி விழுந்து படுகாயமடைந்ததாக தெரிவித்ததாக கூறியுள்ளனர். இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த மூதாட்டி லூசியா 9ஆம் தேதி அதிகாலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

உடனடியாக, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை போலீசார் இதுகுறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர் குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தியபோது, மூதாட்டி பேருந்தில் இருந்து தவறி விழுந்தது போன்று எந்தவித சம்பவமும் நடைபெறவில்லை எனத் தெரியவந்தது.

இதனால், சந்தேகமடைந்த ராஜிவ் காந்தி மருத்துவமனை போலீசார், மருத்துவமனை வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அதில் அதிர்ச்சித் தகவல் கிடைத்தது. கடந்த 8ஆம் தேதி இரவு, மூதாட்டி ராஜிவ் காந்தி 3ஆம் டவர் பகுதியில் உள்ள மருத்துவர்கள் கார் பார்க்கிங் பகுதியில் தூங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது ராஜிவ் காந்தி மருத்துவமனையில் பணியாற்றி வரும் பயிற்சி மருத்துவர் பிரபாகரன், கார் பார்க்கிங்கில் காரை முன் நோக்கி எடுக்கும்போது மூதாட்டி படுத்திருப்பதை கவனிக்காமல் அவர் மீது மோதியது சிசிடிவியில் பதிவாகி இருந்தது. மேலும், படுகாயமடைந்த மூதாட்டியை மருத்துவர் பிரபாகரன் தூக்கிச்சென்று அவசர சிகிச்சைப்பிரிவில் சேர்த்தது தெரியவந்தது.

இதனையடுத்து, கார் எண் மூலம் காரை ஏற்றிவிட்டு நாடகமாடிய பயிற்சி மருத்துவர் பிரபாகரனை கைது செய்து அவர் மீது அதிவேகமாக வாகனத்தை ஓட்டுதல், கொலையாகாத மரணம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கைது செய்யப்பட்ட பயிற்சி மருத்துவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:போலீஸ் எனக் கூறி 24 லட்சம் ரூபாயை பறித்து சென்ற மூவருக்கு போலீஸ் வலைவீச்சு..!

ABOUT THE AUTHOR

...view details