சென்னை மாங்காடு காவல் துறையினர் பரணி புத்தூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக ஒருவர் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தார். சந்தேகமடைந்து அந்த நபரை பிடித்து விசாரணை செய்த போது, முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார்.
இதைத்தொடர்ந்து அவரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை செய்தபோது, திருமண மண்டபம் ஒன்றில் நகை திருடியதை ஒப்புக்கொண்டார். அவர், பொழிச்சலூரைச் சேர்ந்த பன்னீர்தாஸ் (என்ற) பன்னீர்செல்வம்(23), என்பது தெரியவந்தது. அவரிடம் நடத்திய சோதனையில் பாக்கெட்டில் 7 1/2 பவுன் நகைகள், இரண்டு செல்போன்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
எந்த திருமண மண்டபத்தில் திருடினாய் என்று கேட்டபோது, அந்த திருமண மண்டபத்தை காண்பித்தார். பின்னர் காவல் துறையினர் அவரை அங்கு அழைத்து சென்றனர். திருமண மண்டபத்தின் மேல் அறையில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு நகை, செல்போன்கள் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது உரிமையாளரான பம்மலைச் சேர்ந்த விஜயகுமாருக்கு அப்போதுதான் தெரியவந்தது. திருமண மண்டபத்தின் அறையில் நகை பைகளை வைத்து பூட்டிவிட்டு கீழே சென்று திருமண வேலைகளை பார்த்துக் கொண்டிருந்த போது, பன்னீர்தாஸ் மேலே சென்று நகை திருடியது தெரியவந்தது.
மேலும் விசாரணையில் பன்னீர்தாசின் தந்தைக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். அவர்கள் குடும்பத்தில் இவரோடு சேர்த்து 11 பிள்ளைகள் உள்ளதால், போதிய வருமானம் இல்லாமல் பட்டப்படிப்பு படித்து முடித்து சரியான வேலை இல்லாததால், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.