அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் பலர் கிரிப்டோகரன்சி மூலமாக முதலீடு செய்து வருகின்றனர். அந்த வகையில் பொதுமக்கள் பலரும் கிரிப்டோகரன்சி மூலமாக முதலீடு செய்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக கிரிப்டோகரன்சி மூலமாக பணத்தை முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என பொதுமக்கள் பலர் போலியான கிரிப்டோகரன்சி செயலியில் முதலீடு செய்து கோடிக்கணக்கில் பணத்தை இழக்கும் அவல நிலையும் அதிகரித்து வருகிறது.
சென்னையில் கடந்த சில நாட்களில் மட்டும் ஆறுக்கும் மேற்பட்டோர் ரூ.3 கோடி வரை கிரிப்டோகரன்சி மூலமாக முதலீடு செய்து பணத்தை பறிகொடுத்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.
கிரிப்டோகரன்சி மூலமாக முதலீடு செய்ய வேண்டுமென்றால் இந்திய பணத்தை டாலர்களாக மாற்றிய பின்பே செயலி மூலமாக கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்யமுடியும். இந்திய பணத்தை டாலர்களாக மாற்ற பல செயலிகள் உள்ளது. இந்த செயலி மூலமாக டாலர்களாக மாற்றி கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்யலாம்.
அவ்வாறு கிரிப்டோகரன்சிகளாக பொதுமக்கள் பணத்தை முதலீடு செய்யும் போது ஆசையை தூண்டும் வகையில் முதலில் இரட்டிப்பாக பணம் ஏற்றம் நிகழும். இதனை நம்பிய பொதுமக்கள் பலர் லட்சக்கணக்கில் கிரிப்டோகரன்சி மூலமாக செயலியில் முதலீடு செய்து வருகின்றனர். ஒரு கட்டத்தில் அதிகப்படியான தொகை வந்தவுடன் செயலியில் உள்ள பணத்தை பொதுமக்கள் தங்களது வங்கி கணக்கிற்கு மாற்ற முயன்றால், முடியாத நிலை ஏற்படுகிறது.