சென்னை: போர்ச்சுகல் நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனம் 'பெட்டிக்கோ கமர்ஷியோ’ என்ற நிறுவனம். இந்த நிறுவனம் உலகம் முழுவதும் பல்வேறு தொழில்களில் முதலீடுகளை செய்து வருகிறது. அதன் அடிப்படையில் சென்னையைச் சேர்ந்த கலால் குழுமத்திற்கு சொந்தமான நிறுவனமானது முதலீடுகளுக்காக பெட்டிக்கோ கமர்ஷியோ என்ற நிறுவனத்தை அணுகியுள்ளது. பெட்டிக்கோ கமர்சியோ என்ற நிறுவனம் ராமாபுரம் டிஎல்எப் பகுதியில் கிளை செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த ஆண்டு கலால் குழும நிர்வாகிகள் மீது நம்பிக்கை வைத்து, கனிமவள வர்த்தக வியாபாரத்திற்காக சுமார் 114 கோடி ரூபாய் அளவில் முதலீடுகளை செய்துள்ளது. இந்த நிறுவனத்துடன் முதலீடு செய்வதற்கு சில நிபந்தனைகளையும் விதித்திருந்தது. அதன்படி 70 சதவீத பங்கு தங்களுக்கும் 30 சதவீத பங்கு கலால் குழுமத்திற்கும் என ஒப்பந்தங்கள் செய்து கொண்டுள்ளன. போர்ச்சுக்கல் நிறுவனம் சார்பாக மூன்று இயக்குனர்களும் கலால் குழுமம் சார்பாக இரண்டு இயக்குனர்களும் இணைந்து நடத்தலாம் என்றும் ஒப்பந்தம் போடப்பட்டது.
ஆனால் ஒப்பந்தங்களை மீறி கலால் குழும நிறுவனம் தொடர்ந்து செயல்பட்டு வந்துள்ளதாக போர்ச்சுக்கல் நிறுவனம் குற்றம் சாட்டியது. இருப்பினும் கனிமவள வர்த்தகத்திற்காக கனரக வாகனங்கள், உபகரணங்கள் வாங்கப்பட்டதாகவும், இந்த தொழில் தொடர்பாக சத்தீஸ்கர் மாநிலத்தில் தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாகவும் ஆவணங்களை போர்ச்சுக்கல் நிறுவனத்திற்கு கலால் குழுமம் நிறுவன நிர்வாகிகள் காண்பித்துள்ளனர்.
இந்நிலையில் போர்ச்சுக்கல் நிறுவனமானது கலால் குழும நிறுவன இயக்குனர்கள் கொடுத்த ஆவணங்களை சரி பார்த்ததில் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தங்களிடம் சுமார் 114 கோடி ரூபாய் பணத்தை கனிமவள வர்த்தகத்திற்காக முதலீடு செய்ததாக போலி ஆவணம் மூலம் கணக்கு காட்டியது தெரியவந்தது. மேலும் கொடுக்கப்பட்ட பணத்தை வேறு கணக்கிற்கு மாற்றி பல முதலீடுகளை மேற்கொண்டதும் தெரிய வந்துள்ளது.
அது மட்டுமல்லாது தொழில் வளர்ச்சிக்காக கனரக வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்கியதாக போலி ஆவணங்கள் காட்டியும், இல்லாத ஒரு நிறுவனத்தில் தொழில் ஒப்பந்தம் மேற்கொண்டது போன்று மோசடி செய்ததும் பெட்டிக்கோ கமர்ஷியோ நிறுவனத்திற்கு தெரிய வந்தது.