சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சுமை தூக்கும் கூலித்தொழிலாளி கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூலித் தொழிலாளியாகத் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பூங்காவனம் என்பவர் வேலை செய்து வந்தவர். இவருக்கும் அங்கு கூலித் தொழில் செய்து வரும் குமார் என்பவருக்கும் நேற்று முன்தினம் (மார்ச்1) இரவு சுமை தூக்குவதில் மோதல் ஏற்பட்டுள்ளது. இருவரையும் அங்கிருந்த பிறத் தொழிலாளிகள் விலக்கி அனுப்பி வைத்துள்ளனர்.
இதில் ஆத்திரமடைந்த குமார், நேற்று (மார்ச்2) காலை சென்ட்ரல் ரயில்வே நிலையம் பயணிகள் காத்திருக்கும் பகுதியில் படுத்திருந்த பூங்காவனத்தின் தலையில் பெரிய கல்லைக் கொண்டு அடித்துவிட்டு, அருகிலிருந்த குப்பைத் தொட்டியில் கல்லைப் போட்டு விட்டுத் தப்பிச் சென்றார். இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பூங்காவனம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சூழலில் ரயில்வே காவல் துறையினர் இதனைக் கொலை வழக்காகப் பதிவுசெய்து, குமாரைத் தேடி வருகின்றனர். தொடர்ந்து அங்கிருந்த இரகசிய கண்காணிப்புப் படக்கருவிகளின் பதிவுகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரயில் நிலையத்தில் கூலித் தொழிலாளி அடித்துக் கொலை - பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் இவ்வேளையில் கொலை தொடர்பான காணொலிப் பதிவுகள் தற்போது வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளன.