சென்னை: சிந்தாதிரிப்பேட்டையில் கடந்த 24ஆம் தேதி பாஜக பிரமுகர் பாலசந்தர் மூன்று பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கில், தலைமறைவான கும்பலை பிடிக்க 4 தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். முன்விரோதம் காரணமாக ரவுடிகளான பிரதீப், சஞ்சய் கூட்டாளிகளுடன் இணைந்து பாலசந்தரை கொலை செய்தது தெரியவந்தது.
இதில், நேற்று முன்தினம் (மே 26) தலைமறைவாக இருந்த நான்கு பேரை சேலம் எடப்பாடியில் வைத்து போலீசார் கைது செய்தனர். சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த பிரதீப், சஞ்சய், கலை, ஜோதி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரிடமும் விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர்.
இதனிடையே கைது செய்யப்பட்ட நபர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. பாஜக பிரமுகரான பாலசந்தர் தொடர்ந்து தனது தந்தை தர்கா மோகனுக்கும், தங்களுக்கும் தொல்லை கொடுத்து வந்ததாகவும், யாரோ மாமூல் கேட்டதற்கு தங்கள் மீது காவல் துறையில் புகார் அளித்து சிறைக்கு அனுப்பியதாகவும் பிரதீப் தெரிவித்துள்ளார்.
மேலும், பிரதீப், "சிறையிலிருந்து கடந்த வாரம்தான் வெளியே வந்தேன். ஆனால், மறுபடியும் என் மீது பாலசந்தர் பொய் புகார் அளித்து மிரட்டல் விடுத்தார். இதனால், பாலசந்தரிடம் சமரசம் பேசினோம். அதற்கு, ஒத்துவராததால் அவரை தீர்த்துக்கட்ட முடிவு எடுத்தோம். சம்பவம் நடந்த நாளன்று பாதுகாப்பு காவலர் பாலமுருகன் டீக்குடிக்க சென்ற போது இருசக்கர வாகனத்தில் சென்று பாலசந்தரை சரமாரியாக வெட்டிக்கொன்றோம்" என வாக்குமூலம் அளித்தார்.