சென்னை: பீச் ஸ்டேஷனில் இருந்து நேற்று முன் தினம்(ஆகஸ்ட் 23) இரவு 9 மணி அளவில் செங்கல்பட்டு நோக்கி செல்லும் ரயில் புறப்படத் தயாராக இருந்துள்ளது. அங்கு பெண்கள் கோச்சில் பாதுகாப்புப்பணியில் ஆர்.பி.எஃப் காவலர் ஆசிர்வா(29) என்பவர் இருந்துள்ளார்.
அப்போது பீச் ரயில் நிலையத்திலிருந்து ரயில் கிளம்பும்போது, பெண்கள் பெட்டியில் அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ஏறி உள்ளார். இதனைக்கண்ட காவலர் அந்த நபரை பெண்கள் பெட்டியில் இருந்து கீழே இறங்கும்படி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது திடீரென அந்த நபர் கையில் வைத்திருந்த சிறிய கத்தியை எடுத்து பெண் காவலரின் நெஞ்சு மற்றும் கழுத்து பகுதிகளில் குத்தி உள்ளார். இதில் பலத்த காயமடைந்த பெண் காவலர் ஓடும் ரயிலில் இருந்து இறங்கி தப்பித்து சென்றுள்ளார்.
இது குறித்து தகவலறிந்த எழும்பூர் ரயில்வே போலீஸார் காயமடைந்த பெண் காவலரை மீட்டு, சிகிச்சைக்காக பெரம்பூர் ரயில்வே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து முறையற்று தடுத்தல், கொலை முயற்சி, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், ஆயுதங்களைப் பயன்படுத்தி காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்து அடையாளம் தெரியாத நபரைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ரயிலில் பணியில் இருந்த பெண் போலீஸுக்கு கத்திக்குத்து... ரத்தம் சொட்ட சொட்ட ரயிலில் இருந்து குதித்தோடும் காட்சி சிசிடிவி காட்சிப்பதிவுகளை வைத்து அந்த நபரை எழும்பூர் ரயில்வே போலீஸார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் ரயிலில் அடையாளம் தெரியாத நபரால் கத்தியால் குத்தப்பட்டு காயமடைந்த பெண் காவலர் ஆசிர்வா, ஓடும் ரயிலில் இருந்து குதித்து தப்பித்துச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
இதையும் படிங்க:கஞ்சா புகைத்த காவலர்கள் 3 பேர் பணியிடை நீக்கம்