சென்னை: வண்ணாரப்பேட்டை எம்.சி. சாலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட துணிக்கடைகள் இயங்கிவருகின்றன. இங்கு வியாபார போட்டி அதிகமாக இருப்பதினால் வாடிக்கையாளர்களை அழைத்துச் செல்வதற்காக, இளைஞர்கள் பணியமர்த்தப்பட்டு அவர்களுக்கு நாளொன்றுக்கு 500 ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில் வண்ணாரப்பேட்டை ஜீன்ஸ் பார்க் கடைக்கு வரக்கூடிய வாடிக்கையாளர்களை, வலுக்கட்டாயமாக அருகே இருக்கும் கடைகளுக்கு இளைஞர்கள் அழைத்துச் செல்வதாக ஜீன்ஸ் பார்க் கடை ஊழியர் ஆசிப், உரிமையாளர் தமீம் அன்சாரியிடம் தெரிவித்துள்ளார். இதனால் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் இருந்துள்ளது.
இதே நிலை தொடர்ந்ததால் இது குறித்து இளைஞர்கள் மீது ஜீன்ஸ் பார்க் உரிமையாளர் தமீம் அன்சாரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில் வண்ணாரப்பேட்டை காவல் துறையினர், ரஞ்சித், திலக், பிரேம், ராஜா ஆகியோரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து எச்சரித்து எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பிவைத்துள்ளனர்.