பெங்களூருவைச் சேர்ந்த மகாதேவய்யா, அவரது மகன் அங்கித், ஓசூரைச் சேர்ந்த ஓம் மூவரும், பிரதமர், ஆளுநர் பெயரை பயன்படுத்தி தொழிலதிபர், திரைப்பட தயாரிப்பாளரிடம் எம்பி சீட் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.5 கோடி வரை மோசடி செய்துள்ளனர். பின்பு ஆளுநர், மற்றும் பிரதமர் அலுவலகத்தில் இருந்து மின்னஞ்சல் அனுப்புவது போன்ற மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோன்று பெங்களூருவில் பலரிடம் மருத்துவக் கல்லூரியில் மருத்துவர் சீட்டு வாங்கித் தருவதாகவும், மத்திய அரசிடம் டெண்டர் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி வரை மோசடி செய்துள்ளனர். மோசடியில் ஈடுபட்டு வந்த மூவரையும் சிபிசிஐடி தனிப்படை காவல்துறை மைசூரில் கைதுசெய்தது. இதனைத்தொடர்ந்து, 3 பேரையும் 6 நாள் காவல் எடுத்து சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகின்றது.
விசாரணையில், பிரதமர் அலுவலகத்தில் வேலை பார்த்து ஓய்வுபெற்ற இரண்டு ஐஏஎஸ் அலுவலர்கள் இதற்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்துள்ளது. அவர்களுக்கு மகாதேவய்யா தொடர்பான வங்கி கணக்கில் இருந்து பணப்பரிவர்த்தனை நடந்திருப்பதை சிபிசிஐடி காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
அதன் தொடர்ச்சியாக நேற்று (பிப்.18) மூன்று பேரையும் பெங்களூரு, மைசூர், டெல்லி ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்று சிபிசிஐடி காவல்துறை விசாரணை நடத்தியது.