சென்னை:தொழிலதிபரைக் கடத்தி சொத்துகளைப் பறித்த வழக்கில் சிபிசிஐடி காவல்துறையினர் தங்களின் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
சென்னை அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ், சொந்தமாக பிபிஓ நிறுவனம் நடத்த முடிவு செய்து திருமுல்லைவாயிலில் 20 பணியாட்களுடன் அலுவலகம் தொடங்கியுள்ளார். மேலும் அவர் 2013ஆம் ஆண்டு தனக்கு அறிமுகமான தேனாம்பேட்டையைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவருடன் இணைந்து தொழில் நடத்தப் பாதுகாப்பு உறுதித் தொகையாக ரூ.10 லட்சம் வழங்கி (Security Deposit), வெங்கடேசன் நடத்தி வந்த மென்பொருள் நிறுவனத்துக்குத் தேவையான வேலைகளைத் தனது பிபிஓ நிறுவனம் மூலம் செய்து கொடுத்து வந்துள்ளார்.
தொழிலில் வந்த நெருக்கடி
இவர்களது தொழில் சுமுகமாகச் சென்றுகொண்டிருக்க 2015ஆம் ஆண்டுக்கு மேல் பணத் தட்டுப்பாடு காரணமாகத் தொழில் இழப்பு ஏற்பட்டு வெங்கடேசன் ராஜேஷுக்கு 5.5 கோடி ரூபாய்வரை பணம் தரவேண்டிய சூழல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இச்சூழலில், பல நாட்களாகப் பணத்தைத் தராமல் தட்டிக்கழித்து வந்த வெங்கடேசனிடம் ராஜேஷ் பணத்தைத் தராவிட்டால் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டியதையடுத்து படிப்படியாக ராஜேஷுக்கு தரவேண்டிய பணம் 5.5 கோடி ரூபாயை வெங்கடேசன் திருப்பி கொடுத்து பிரச்னையை சுமுகமாக முடித்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
பட்டாசுக்கடை விபத்தில் உயிரிழந்த சிறுவர்களின் தாய் தற்கொலை
இச்சூழலில், 2019ஆம் ஆண்டு ராஜேஷுக்கு வந்த தொலைபேசி அழைப்பு ஒன்றில் சிபிஐ-இல் இருந்து பேசுவதாகவும், வெங்கடேசன் சிவா என்பவரை ரூ.20 கோடி வரை ஏமாற்றியுள்ளதாகக் கூறி ராஜேஷுக்கு வெங்கடேசன் அளித்த பணம் குறித்து விசாரித்ததாகவும், பின்னர் இணைப்பைத் துண்டித்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர், சில நாட்கள் கழித்து ராஜேஷின் இல்லத்திற்கு வந்த காவல்துறையினர் சிலர், அவரை திருமங்கலம் காவல் நிலையம் அழைத்துச் சென்று வெங்கடேசன் அளித்த பணம் குறித்து விசாரித்ததாகவும், அங்கு வைத்து ராஜேஷை அப்போதைய திருமங்கலம் காவல் ஆய்வாளர் சரவணன் உள்ளிட்டோர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து ஏமாற்றப்பட்ட ராஜேஷ்
அதன்பின் தனது சொத்துக்களைச் சிவா என்பவருக்கு எழுதிக் கொடுக்க காவல் ஆய்வாளர் மிரட்டியதன் பேரில், பவர் ஆஃப் அட்டாணி சிவா பெயரில் எழுதிக் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் இது தொடர்பாக அப்போதைய காவல் ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா, ராஜேஷை குடும்பத்தினருடன் அழைத்துச் சென்று நடந்தவற்றைக் கேட்டு எழுதிவாங்கிக் கொண்டு நடவடிக்கை எடுக்காமல் திருப்பி அனுப்பி விட்டதாகவும் அறியப்படுகிறது.
இதனையடுத்து பிரச்னைகள் வேண்டாம் என ஒதுங்கி ராஜேஷ் கோயம்புத்தூருக்குத் தனது வருங்கால மனைவியுடன் சென்று தங்கியுள்ளார். அப்போது அங்கு வந்த திருமங்கலம் உதவி ஆய்வாளர் பாண்டியராஜன் குண்டர்களுடன் வந்து ராஜேஷையும் அவரது வருங்கால மனைவியையும் சென்னைக்குக் கடத்தி வந்து செங்குன்றத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் அடைத்து வைத்ததாகவும், ராஜேஷின் தாயார் மற்றும் வருங்கால மனைவியின் தம்பி ஆகியோரையும் கடத்தி வந்து அங்கு அடைத்து வைத்ததாகவும் தெரியவந்துள்ளது.
காதலியை கொலைசெய்து சாக்குப்பையில் கட்டி வீசிய காதலன்
இதைத் தொடர்ந்து அங்கு வந்த திருமங்கலம் உதவி ஆணையர் சிவக்குமார், கோடம்பாக்கம் ஸ்ரீ, தொழிலதிபர் ஸ்ரீனிவாச ராவ் அவரது மகன் தருண் கிருஷ்ண பிரசாத் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த குண்டர்கள் சிலர் ராஜேஷை தாக்கி பல நாட்கள் சித்தராவதைச் செய்து அவரின் குடும்பத்தைக் கொலை செய்து விடுவதாகவும், வருங்கால மனைவியைக் பாலியல் வன்புணர்வு செய்து விடுவதாகவும், ராஜேஷ் மீது கஞ்சா வழக்குப்பதிவு செய்து சிறைக்கு அனுப்பி விடுவதாகவும் மிரட்டி ராஜேஷின் சொத்துக்கள் அனைத்தையும் எழுதி வாங்கிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
புகார் அளித்தும் பலனளிக்கவில்லை
இச்சூழலில், ராஜேஷ் இச்சம்பவம் தொடர்பாக 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையத்தில், டிசம்பர் 2020ஆம் ஆண்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மீண்டும் புகார் அளித்தார். அதில் மேல் கூறிய தகவல்களை குறிப்பிட்டு தனக்கு நேர்ந்த கொடூரத்திற்குக் காரணமான காவல்துறை அலுவலர்கள், தொழிலதிபர்கள், குண்டர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து அபகரிக்கப்பட்ட தனது சொத்தை மீட்டுத் தருமாறு குறிப்பிட்டுள்ளார்.
பிங்க் வாட்ஸ்அப்: உஷார் ஐயா உஷாரு... லிங்க்கை தொட்ட கெட்ட !
மேலும், தனக்கோ தன் குடும்பத்திற்கு ஏதேனும் நேரும்பட்சத்தில், புகாரில் குறிப்பிட்டவர்களே அதற்கு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ராஜேஷ் அளித்த புகாரில் காவல்துறை அலுவலர்கள் சம்மந்தப்பட்டுள்ள நிலையில் அந்த புகார் தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு, அவர் மூலம் இந்த வழக்கில் முகாந்திரம் ஏதேனும் உள்ளதா என சிபிசிஐடி காவல் துறை விசாரிக்க ஜனவரி மாதம் உத்தரவிடப்பட்டது.
விசாரணையைத் தொடங்கிய சிபிசிஐடி
மார்ச் மாதம் இவ்வழக்கை விசாரித்து அறிக்கை அளிக்கும்படி காவல்துறை இயக்குநர் அப்போதைய சிபிசிஐடி இயக்குநர் பிரதீப் வி.பிலிபுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இவ்வேளையில், சிபிசிஐடி காவல் துறையினர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தொழிலதிபர் வெங்கடேசன், சிவா, சீனிவாசராவ், தருண் கிருஷ்ண பிரசாத், சம்மந்தப்பட்ட காவல்துறை அலுவலர்கள் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி, இச்சம்பவத்தில் அவர்களுக்குத் தொடர்புள்ளதா என முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக, நேற்று புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள ஆய்வாளர்கள் சரவணன், ராஜேஷ் கண்ணா, உதவி ஆய்வாளர் பாண்டியராஜன் ஆகியோரை சிபிசிஐடி காவல் துறையினர் விசாரித்துள்ளனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக உதவி ஆணையர் சிவகுமாரை நாளை (ஏப்ரல் 21) விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும், சிபிசிஐடி காவல் துறையினர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபிசிஐடி இந்த விசாரணைக்குப் பின் காவல்துறை இயக்குநருக்கு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், காவல்துறை இயக்குநர் உத்தரவின் பேரில் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்படுமா? இல்லையா? என்பது குறித்துக் கூடுதல் தகவல்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.