சென்னை: வியாசர்பாடியை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவரான அப்துல் ரஹீம் ஜன.13ஆம் தேதி பணியை முடித்து கொடுங்கையூர் எம்.ஆர்.நகர் வழியாக வந்த போது, காவல்துறையினர் தடுத்து நிறுத்தி முகக்கவசம் அணியாமல் சென்றதாக வழக்குபதிவு செய்து அபராதம் செலுத்துமாறு கேட்டுள்ளனர்.
அப்போது ரஹீம், முகக்கவசம் அணிந்திருப்பதாக கூறி காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, காவலர் உத்திரகுமாரின் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. உடனே காவல்துறையினர் ரஹீமை கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.
இதனையடுத்து கொடுங்கையூர் காவல்துறையினர் இரவு முழுவதும் தன்னை நிர்வாணமாக்கி கொடுமைப்படுத்தியதாக ரஹீம் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் இரவு முழுவதும் பைப் மற்றும் பூட்ஸ் காலால் மார்பில் எட்டி உதைத்து காயப்படுத்தியதாகவும், சாதி ரீதியாக அசிங்கபடுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தன்னை தாக்கிய எம்.கே.பி நகர் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் நசீமா, கொடுங்கையூர் காவல் நிலைய காவலரான உத்திரகுமார், ஹேம நாதன், சத்தியராஜ், ராமலிங்கம், அந்தோணி,தலைமை காவலர் பூமி நாதன் உட்பட ஒன்பது காவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ரஹீம் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.