சென்னை:அதிமுக எம்எல்ஏ-வாக இருந்த எம். கே பாலன் கடந்த 2000ஆம் ஆண்டில் திமுகவில் இணைந்தார். 2001ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது வீட்டிலிருந்து நடை பயிற்சிக்காக வெளியே சென்ற பாலன் காணாமல் போனார். இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டு சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றப்பட்டது.
பாலனை இறந்த நிலையில் சிபிசிஐடி காவலர்கள் மீட்டனர். இந்த வழக்கு தொடர்பாக விசாரணை செய்து அதிமுகவைச் சேர்ந்த 15 பேர் குற்றவாளிகள் என 2004ஆம் ஆண்டு சென்னை விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. முன்னாள் எம்எல்ஏ பாலனை கடத்தி கொலை செய்த விவகாரத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
உறுதிசெய்த உச்ச நீதிமன்றம்
தண்டனைக்கு உள்ளான அனைவரும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர். இதில் மாறுபட்ட தீர்ப்புகளை இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு தெரிவித்தது. அதன்பிறகு, மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் வழக்கு விசாரிக்கப்பட்டு, கடந்த 2007ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தண்டனைக்கு உள்ளானவர்கள் மேல்முறையீடு செய்தனர். கடந்தாண்டு ஜூன் மாதம் உச்ச நீதிமன்றம் 15 பேருக்கும் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதிசெய்து உத்தரவிட்டது. மூன்று வார காலத்திற்குள் குற்றவாளிகள் அனைவரும் சரணடைய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.