சென்னை:சட்டவிரோத மதுபான விற்பனை குறித்து விசாரிக்கச் சென்ற இரண்டு காவல் உதவி ஆய்வாளர்களை தாக்கியவர்களில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் கள்ளச்சந்தையில் மதுபான விற்பனை தலைதூக்கியுள்ளது. இந்நிலையில், சென்னை மாவட்டம், ஓட்டேரி பிரிக்லின் சாலையில் ரகசியமாக மது விற்பனை நடைபெறுவதை அறிந்து சரவண பெருமாள் என்பவர், மது வாங்குவதற்காக சென்றுள்ளார்.
தொடர்ந்து, மதுபானத்திற்கு உண்டான 500 ரூபாய் பணத்தை அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடம் அவர் தந்த நிலையில், மதுபானம் தராமல் அந்நபர் இவரை ஏமாற்றிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். தொடர்ந்து, விரக்தியில் வேறு ஒருவரிடம் 200 ரூபாய் கொடுத்து மதுபான பாட்டில் வாங்கி உள்ளார். பின்பு 500 ரூபாய் பறித்துச் சென்ற நபரிடம் பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு கேட்டதற்கு அங்கிருந்த நபர்கள் சரவண பெருமாளை அடித்து விரட்டி உள்ளனர்.
இந்நிலையில், இது குறித்து சரவணபெருமாள், ஓட்டேரி ரோந்துப் பணியிலிருந்த பெண் உதவி ஆய்வாளரான ஷஜிபாவிடம் தெரிவித்ததை அடுத்து, உதவி ஆய்வாளர் ஷஜிபா, திட்டமிட்டு சரவணபெருமாளை மீண்டும் மதுபாட்டில் வாங்க அனுப்பி உள்ளார். அப்படியே அவரைப் பின்தொடர்ந்து சென்ற ஷஜிபா, மதுபாட்டிலை விற்க வந்த சேகர் (எ) மீசை சேகர் என்பவரை பிடித்து மதுபான பாட்டிலை பறிமுதல் செய்துள்ளார்.