பிரபல அரசு பல்கலைக்கழகத்தில் உடற்கல்வி இயக்குநராக இருந்து வரும் செந்தில்குமார் என்பவர், கடந்த 2018ஆம் ஆண்டு ஆளுநர் மாளிகைக்குச் சென்று, தனக்கு எப்போது அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி வழங்குவீர்கள் எனக்கேட்டதும் தமிழ்நாடு ஆளுநர் மாளிகையே அதிர்ந்தது.
ஆளுநர் மாளிகை அதிகாரிகள் விசாரணை செய்தபோது, ஆளுநர் மாளிகையில் மகாதேவய்யா என்பவர், தனக்கு ஆளுநர் நெருக்கம் என்பதால் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பொறுப்பு வாங்கித் தருவதாகக்கூறி, ரூபாய் 1.5 கோடி ரூபாய் பணம் வாங்கியதாகவும், இதுதொடர்பாக ஆளுநர் அலுவலகத்தில் இருந்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணி நியமனம் செய்திருப்பதாக தனக்கு மெயில் வந்திருப்பதாகவும் செந்தில் குமார் கூறியுள்ளார்.
அதிகாரிகள் செந்தில்குமாருக்கு வந்த மெயிலை சோதனை செய்து பார்த்தபோது, அந்த மெயில் போலியாக உருவாக்கப்பட்டது என்பது தெரியவந்தது. மேலும் அதில் அனுப்பப்பட்ட தகவலானது அச்சு அசலாக ஆளுநர் மாளிகை அலுவலக முத்திரை மற்றும் அதிகாரிகளின் கையொப்பத்துடன் அனுப்பப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து ஆளுநர் மாளிகை அலுவலக அதிகாரிகள், அப்போதே டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் சிறையில் இருந்து வெளியே வந்த மகாதேவய்யா தான் சினிமா திரைப்படத் தயாரிப்பாளரான ஜெபா ஜோன்ஸ் என்பவரையும் ஏமாற்றியதையும் கண்டறிந்தனர்.
பின்னர் ஆளுநர் மாளிகை அலுவலர்கள் கொடுத்தப்புகாரின்படி, பிரதமர் மற்றும் ஆளுநர் பெயரில் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்ட கும்பலை சிபிசிஐடி காவல்துறை தனிப்படை அமைத்து தேடி வந்தது.
அப்போது மைசூரில் தலைமறைவாக உள்ள மோசடி கும்பல் மகாதேவய்யா(54), அவரது மகன் அங்கித்(29) மற்றும் அவர்களது நண்பரான ஓசூரைச் சேர்ந்த ஓம்(34) ஆகிய மூவரை சிபிசிஐடி தனிப்படை காவல்துறை, கைது செய்தது.
முன்னதாக செல்போன் சிக்னல்கள் வைத்து மகாதேவய்யாவை பெங்களூரு சென்று பிடிக்க முயன்றுள்ளனர். காவல் துறையினர் பிடிக்க வருவதை அறிந்த மகாதேவய்யா, தன்னைக் கடத்த வருவதாகக்கூறி கர்நாடக காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
கைது செய்ய சென்ற சிபிசிஐடி காவல் துறையினர் சீருடைகளில் செல்லாமல் சாதாரணமாக சென்றதால், கர்நாடக காவல்துறையினர் சிபிசிஐடி காவல்துறையினரை சந்தேகப்பட்டு பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து மகாதேவய்யா மீதான வழக்கு ஆவணங்கள் மற்றும் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை காண்பித்தபிறகு தமிழ்நாடு சிபிசிஐடி காவல்துறையினரை நம்பியுள்ளனர். இவ்வாறு பொய்ப்புகார் அளித்து தப்ப முயன்ற மகாதேவய்யாவையும் மற்றும் கூட்டாளிகளையும் சாதுர்யமாக சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த மோசடி கும்பலிடம் சிபிசிஐடி காவல்துறை நடத்திய விசாரணையில்; இந்தியப் பிரதமர், பல மாநில முதலமைச்சர்கள் மற்றும் ஆளுநர்களுடன் நெருக்கமாக இருப்பது போன்று காட்டிக்கொண்டு எம்.பி., எம்.எல்.ஏ சீட்டு வாங்கித்தருவதாக ஏமாற்றி வந்துள்ளனர். பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி, சாலை ஒப்பந்தம் போன்ற பொதுப்பணித்துறை ஒப்பந்தங்களை நேரடியாக பெற்றுத் தருவதாகவும் கூறி மோசடி செய்தது தெரியவந்தது. சினிமா படத் தயாரிப்பாளரான ஜெபா ஜோன்ஸ் என்பவரையும் ஏமாற்றியதும் தெரியவந்துள்ளது.
ஒவ்வொரு நபர்களிடமிருந்து ரூபாய் 1.5 கோடி முதல் ரூபாய் 10 கோடி வரை மோசடி செய்திருப்பதும் தமிழ்நாட்டில் மட்டும் ரூபாய் 100 கோடிக்கும் மேல் இக்கும்பல் மோசடி செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதே பாணியில் இக்கும்பல் இந்தியா முழுவதும் பல்வேறு தொழில் அதிபர்கள் மற்றும் பணக்காரர்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது. மகாதேவய்யாவின் மகனும் எம்.இ பட்டதாரியான அங்கித் என்பவரும், இதே பாணியில் மோசடி அரங்கேற்றி வந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த மோசடியில் ஓசூரைச் சேர்ந்தச் சேர்ந்த ஓம் என்பவர் இடைத்தரகராக செயல்பட்டு வந்துள்ளார். மகாதேவய்யா பெங்களூருவில் பெரும் பணக்காரர் என்பதால் இவர் மீது பெங்களூரு காவல் துறைக்கு சந்தேகம் ஏற்படவில்லை. இதனால் பெங்களூருவிலிருந்து மோசடிக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் வாங்கி, போலி சான்றிதழ்களை உருவாக்கியதும் தெரியவந்தது.
500 கோடிக்கும் மேல் சொத்து:
கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் பெங்களூரு, மைசூரு போன்ற பகுதிகளில் மகாதேவய்யா மூன்று வீடுகளை வாங்கியுள்ளார். அதேபோல அவரது மகன் அங்கித் மூன்று வீடுகள் மற்றும் பல இடங்களில் சொத்துகள் வாங்கியுள்ளார் என்பதாலும் அதுமட்டுமல்லாமல் இவர்களுக்கு 500 கோடிக்கும் மேல் சொத்து மதிப்புகள் உள்ளதாலும் மோசடி செய்த பணத்தில் இவர்கள் சொத்துகள், வீடுகள் வாங்கி இருக்கலாம் என சிபிசிஐடி காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இவர்களது வங்கிக் கணக்கையும் காவல் துறையினர் முடக்கத் திட்டமிட்டுள்ளனர். மேலும் தற்போது வரை இவர்கள் மீது பிரபல அரசு பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநர் செந்தில்குமார் மற்றும் சென்னை வடபழனியைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளரான ஜெபா ஜோன்ஸ் ஆகிய இருவர் மட்டுமே புகார் அளித்துள்ளனர்.
ஆனால், இவர்களால் 50க்கும் மேற்பட்ட நபர்கள் தமிழ்நாட்டில் மட்டுமே ஏமாற்றப்பட்டு இருக்கலாம் எனவும்; அவர்கள் சிபிசிஐடி அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் எனவும் சிபிசிஐடி காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் வேறு என்னென்ன மோசடிகளில் ஈடுபட்டு உள்ளனர்? இந்தியா முழுவதும் எத்தனை நபர்களை இவர்கள் ஏமாற்றி, அதன் மூலம் எவ்வளவு கோடி பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்தும் சிபிசிஐடி காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:மாமல்லபுரத்தில் முதலமைச்சர் பழனிசாமிக்கு 160 அடி நீள மணல் சிற்பம்