மதுரை: தேனி அருகே வடவீரநாயக்கன்பட்டி பகுதியில் கடந்த அதிமுக ஆட்சியில் ரூ.700 கோடி மதிப்புள்ள 182 ஏக்கர் அரசு நிலம் அதிகாரிகள் துணையோடு, அதிமுக ஒன்றிய முன்னாள் செயலாளர் அன்னப்பிரகாஷ் உள்ளிட்ட பலருக்கு முறைகேடாக பட்டா மாற்றப்பட்டது.
இது தொடர்பாக அன்னப்பிரகாஷ், பெரியகுளம் ஆர்டிஓ ஆனந்தி, ஜெயப்பிரதா, தாசில்தார்கள் கிருஷ்ணகுமார், ரத்னமாலா, துணைத் தாசில்தார்கள் மோகன்ராம் உள்ளிட்ட பலர் மீது வழக்கு பதியப்பட்டது. தற்போது இவ்வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கில் இருந்து தனக்கு பிணை வழங்கக் கோரி தாசில்தார் மோகன்ராம், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு அளித்தார். இந்த வழக்கின் முந்தைய விசாரணையின்போது அரசு தரப்பில், "4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், 4 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. ஒருவர் தலைமுறைக்காக உள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டது
தலைமறைவான ஒருவரை கைது செய்ய என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என நீதிபதி கேள்வி எழுப்பினார். இந்த மனு நேற்று (ஜூலை 1) நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், மனுவை திரும்பப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு அரசு தரப்பில், "தலைமறைவானவரின் வங்கிக் கணக்கை ஆய்வு செய்ததில் எந்த ஒரு பண பரிவர்த்தனையும் நடைபெறவில்லை. மேலும், கைது செய்வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது" என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதி, "எத்தகைய சிறப்பு விசாரணை அமைப்பாக இருந்தாலும் பொதுமக்களுக்கு மேலான சேவையை வழங்குவது இல்லை. குற்றவாளிகள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரிந்தும் அவர்களை வேண்டும் என்றே கைது செய்யாமல் இருப்பது போல் தெரிகிறது. அரசின் இந்த பதில் திருப்தி அளிக்கவில்லை" எனக் கூறி வழக்கை திரும்ப பெற அனுமதி அளித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:பட்டா மாறுதலுக்கு லஞ்சம் - சர்வேயர் கைது