தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

குடித்துவிட்டு தொல்லை கொடுத்த கணவர்; விஷம் கொடுத்து கொலை செய்த மனைவி - திருநெல்வேலி

வேலைக்குச் செல்லாமல் மதுபோதையில் தொல்லை கொடுத்த கணவரை, விஷம் கொடுத்து கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.

குடித்து விட்டு தொல்லை கொடுத்த கணவர்; விஷம் கொடுத்து கொலை செய்த மனைவி
குடித்து விட்டு தொல்லை கொடுத்த கணவர்; விஷம் கொடுத்து கொலை செய்த மனைவி

By

Published : Oct 3, 2022, 7:47 PM IST

திருநெல்வேலி: திசையன்விளை அருகே உள்ள குட்டத்தை அடுத்த குஞ்சன்விளை மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் சிங்காரவேலன் (வயது 40). கூலித்தொழிலாளியான இவருக்கு ஜெயக்கொடி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.

சிங்காரவேலன் சமீப காலமாக மது குடித்துவிட்டு சரிவர வேலைக்குச்செல்லாமல் இருந்து வந்ததாகவும், மதுபோதையில் தினமும் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சிங்காரவேலனின் தாயார் மூக்கம்மாள், தனது மகன் வீட்டுக்குச்சென்றபோது அங்கு சிங்காரவேலன் வாந்தி எடுத்து மயங்கி கிடந்துள்ளார். உடனே, அவரை அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து சிங்காரவேலனின் உடலை வீட்டுக்கு கொண்டு வந்து குளிர்பதன பெட்டியில் வைத்து பாதுகாத்துள்ளனர்.

இதற்கிடையே தனது மகன் சாவில் மர்மம் இருப்பதாகவும், இதுதொடர்பாக ஜெயக்கொடியிடம் விசாரிக்க வேண்டும் என்றும் உவரி போலீசில் தாயார் மூக்கம்மாள் புகார் அளித்தார். அதன்பேரில் உவரி போலீசார் இதுகுறித்து சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்ததோடு சிங்காரவேலனின் உடலைக் கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து ஜெயக்கொடியிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாகப் பதில் கூறி உள்ளார். உடனே அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று நடத்திய விசாரணையில், சிங்காரவேலன் தினமும் குடித்துவிட்டு வந்து தகராறு செய்ததால் ஆத்திரத்தில் குருணை மருந்தை சாப்பாட்டில் கலந்து கொடுத்து, அவரை கொலை செய்ததாக ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

இதையும் படிங்க:குளிர்பானத்தில் நச்சு... 6ஆம் வகுப்பு மாணவனின் சிறுநீரகங்கள் செயலிழப்பு

ABOUT THE AUTHOR

...view details