ராமநாதபுரம் மாவட்டம் கன்னிராஜபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து (33). இவர் தேநீர் கடையில் வேலை பார்த்து வந்தார். இவரது 10 வயது, 12 வயது மகள்களிடம் இரவு நேரத்தில் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதுகுறித்து காவல்துறையிடம் தெரிவித்தால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாக தெரிகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி இரவு நேரத்தில் குடிபோதையில் இருந்த மாரிமுத்து, மகள்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அப்போது மகள்கள் இருவரும் கூச்சலிட்டதால், அக்கம்பக்கத்தினர் மாரிமுத்துவிடம் இருந்து மகள்களை மீட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த சைல்டு லைன் அமைப்பினர் கடந்த ஆண்டு பிப்.1ஆம் தேதி கீழக்கரை மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு ராமநாதபுரம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இறுதி விசாரணை நேற்று நிறைவடைந்தது.
இதன்படி, பெற்ற மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாரிமுத்துவை இயற்கை மரணம் அடையும் வரை சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சுபத்ரா தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட இரண்டு மகள்களுக்கும் தலா 1.5 லட்சம் மாரிமுத்து வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் வாழ்த்து