சென்னை:பண்டிகை நாட்களில் அரசு அலுவலங்களில் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கும் கையூட்டு நடவடிக்கைகள் வாய்ப்பு இருப்பதாக கூறி அரசு அலுவலகங்களில் திடீர் ரெய்டு என்ற பெயரில் விஜிலென்ஸ் அதிகாரிகள் சோதனைகள் நடத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு ரெய்டு என்ற பெயரில் அரசு அதிகாரிகளை குறிவைத்து கலங்கடித்து வரும் போலி விஜிலென்ஸ் அதிகாரிகளால், நிஜம் எது போலி எது என்று தெரியாமல் அரசு அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர். குரு சிஷ்யன் படத்தில் வரும் காமெடி காட்சிகள் போல இந்த சோதனைகள் நடக்கின்றன.
குறிப்பாக, சென்னை தரமணி சிஎஸ்ஐஆர் சாலையில் உள்ள நீர்வளத்துறை அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணியாற்றி வருபவர் அசோகன்(56). இவர் கடந்த 23ஆம் தேதி அலுவலகத்தில் பணியில் இருந்த போது லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் எனக்கூறி டிப் டாப் ஆசாமி ஒருவர் வந்துள்ளார்.
அசோகனிடம் உங்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்திற்கு 10-க்கும் மேற்பட்ட புகார்கள் தொடர்ச்சியாக வந்த வண்ணம் உள்ளதாகவும், அதைப்பற்றி பேச வேண்டும் என்றும் கூறியுள்ளார். பின்னர் தனியாக அழைத்து சென்ற அவர் ஓய்வு பெற சில காலங்களே உள்ள நிலையில் வழக்கில் சிக்கி கொள்ள வேண்டாம் என்று கூறியுள்ளார்.
தொடர்ச்சியாக புகார்கள் வந்தாலும் அதனை தான் உயர் அதிகாரிகளிடம் பேசி சரி செய்து தருவதாகவும் , உடனடியாக 10 லட்சம் ரூபாய் லஞ்சமாக தர வேண்டும் என்றும் நேரடியாக கேட்டுள்ளார். இல்லையென்றால் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டி உள்ளார். இதனை கேட்டு மிரண்டு போன அசோகன், தனது அரசு வாகன ஓட்டுனரான முகுந்தனை அழைத்து
அவசரமாக வெளியே செல்ல வேண்டும் எனக் கூறினார். இதையடுத்து நீர்வளத்துறை அதிகாரி அசோகன், ஓட்டுநர் முகுந்தன், லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளர் எனக் கூறிய நபர் ஆகிய 3 பேரும் சைதாப்பேட்டையில் உள்ள அசோகன் வீட்டிற்கு சென்றுள்ளனர். அசோகன் தனது வீட்டில் பீரோவில் மனைவி ஏதாவது பணம் வைத்திருக்கிறாரா என பார்த்துள்ளார்.
பணம் எதுவும் இல்லாத நிலையில் செய்வதறியாது தவித்த அசோகனை, அந்த அதிகாரி மிரட்டவே பதறியப்படி சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள IOB வங்கி லாக்கரில் பணம் இருப்பதாக கூறி அங்கு சென்று பணத்தை எடுத்துதருவதாக கூறி வீட்டில் இருந்து லாக்கர் சாவியை எடுத்துக் கொண்டு சென்றுள்ளனர்.
அந்த சமயத்தில் அசோகனின் மனைவி அருள்மொழிக்கு, லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் எனக் கூறிய நபர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது, இதனால் சுதாகரித்து கொண்டு கணவரின் உடன்பிறந்த சகோதரர் கடலூர் மாவட்டத்தில் பணியாற்றும் டிஎஸ்பி அண்ணாதுரைக்கு நடந்த சம்பவம் குறித்து போனில் விளக்கி உள்ளார்.
அவர் லஞ்ச ஒழிப்புத்துறையினர் யாரும் தனியாக வர மாட்டார்கள், இருந்தாலும் விசாரித்து வருகிறேன் எனக் கூறி சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் விசாரித்துள்ளார். அதுபோல் யாரும் விசாரணைக்கு செல்லவில்லை என லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் பதிலளித்துள்ளனர். இதையடுத்து அண்ணாதுரை, அருள் மொழியை தொடர்பு கொண்டு மோசடி நபராக இருக்கலாம். வங்கி மேலாளரை தொடர்பு கொண்டு லாக்கரை திறக்க அனுமதிக்க வேண்டாம் என தெரிவித்து விடுங்கள் எனக்கூறியுள்ளார்.