கோயம்புத்தூர்: சோமனூரில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கிளை ஒன்று உள்ளது. இந்த வங்கிக் கிளையில், 2019ஆம் ஆண்டுமுதல் நடத்தப்பட்ட பரிவர்த்தனைகள் தொடர்பாக வங்கி நிர்வாகம் தணிக்கையில் ஈடுபட்டது.
இதில், 17 பேருக்கு போலியான ஆவணங்களை வைத்து பணம் கொடுக்கப்பட்டிருப்பதும், வங்கிப் பணியாளர்கள் இதற்கு உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து, முதுநிலை மேலாளர் ஜெகன்குமார் கோவை மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.
இல்லாத நிறுவனங்களுக்கு கடன்
அந்தப் புகாரில் சோமனூர் வங்கிக் கிளையில் 2019இல் மேலாளராகப் பணியாற்றிய ராஜேஷ் என்பவர் 17 பேருக்கு 10.73 கோடி ரூபாய் கடன் வழங்கியிருப்பதாகவும், ஆனால் அவற்றிற்கான சொத்து ஆவணங்கள் போலியானவை என்றும் தெரிவித்தார்.
மேலும், இல்லாத நிறுவனங்களை இருப்பதாகக் காட்டியும் கடன் வழங்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
கோயம்புத்தூர் சோமனூர் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கிளை சோமனூரைச் சேர்ந்த பஞ்சாலை அதிபர் கனகராஜ் என்பவருக்கும் அவரது உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு போலி ஆவணங்களை பெற்று இந்த 10.73 கோடி ரூபாய் கடன் வழங்கியதுடன், மோசடிக்கு உடந்தையாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
பின்னணியில் 35 பேர்?
இந்தப் புகாரின் அடிப்படையில் வங்கியின் முன்னாள் மேலாளர் ராஜேஷ், வங்கி ஊழியர் கார்த்திகேயன், பஞ்சாலை அதிபர் கனகராஜ், அவரது உறவினர்களுகளான ராஜு, ராதிகா, சம்பத்குமார், துரைராஜ், மகேஸ்வரி ஆகிய எட்டு பேரை கோவை மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் கைதுசெய்தனர்.
கைதானவர்கள் மீது கூட்டுச்சதி, மோசடி உள்பட ஏழு பிரிவுகளில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்த நிலையில், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரைத் தேடிவருகின்றனர்.
இந்த மோசடியின் பின்னணியில் 35 பேர் வரை இருப்பதும் காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்தது. கைதுசெய்யப்பட்ட முன்னாள் வங்கி மேலாளர் உள்பட எட்டு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: ஐந்து ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி பாம் நடராஜன் கைது