தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

வழக்கறிஞர் கொலை வழக்கு - மனைவி உள்பட ஆறு பேருக்கு ஆயுள் தண்டனை

சென்னை: திருமணத்தை மீறிய உறவு விவகாரத்தில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது மனைவி உள்பட ஆறு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Lawyer murder case
வழக்கறிஞர் கொலை வழக்கு

By

Published : Feb 25, 2021, 6:52 AM IST

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தவர் முருகன். இவர் லோகேசினி என்பவரை திருமணம் செய்து கொண்டு கோடம்பாக்கம் பகுதியில் வசித்து வந்தார். இந்தநிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் கோடம்பாக்கம் பகுதியில் புதிதாக வாடகைக்கு வீடு பார்க்க சென்றிருந்தார்.

அப்போது, ஆட்டோவில் அவரை சிலர் பின் தொடர்ந்து வந்துள்ளனர். அவர்கள், திடீரென முருகனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து கோடம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில், முருகனின் மனைவியே தனது திருமணம் மீறிய உறவுக்கு கணவன் இடையூறாக இருப்பதாகக் கூறி, காதலன் சண்முகநாதன் என்பவரின் உதவியுடன் கூலிப்படைகளை ஏவி கொலை செய்தது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது. அதன்படி லோகேசினி, சண்முகநாதன், கூலிப்படையினர் கோலார் சுப்பு, சுப்பிரமணி, முரளி, ஜஸ்டின் என ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி செல்வக்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் கவுரி அசோகன் ஆஜராகி, கொலையை நேரில் பார்த்தவர்கள், சம்பவ இடத்தில் கிடைத்த சாட்சிகள் என வழக்கின் அனைத்து சாட்சிகளையும் வைத்து குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வாதிட்டார்.

இந்த வாதங்களை கேட்ட நீதிபதி, முருகனின் மனைவி லோகேசினி அவரது காதலன் சண்முகநாதன், கூலிப்படையினர் என ஆறு பேருக்கும் ஆயுள் தண்டனையும் 1000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

இதையும் படிங்க: இன்ஸ்டாகிராமில் லைவ்: மங்களூருவில் ஒடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details