திருநெல்வேலி:ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்கும் வகையில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையின் மதுரை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில் திருநெல்வேலி காவல் ஆய்வாளர் கோட்டைச்சாமி, காவலர்கள் வள்ளியூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு லாரியில் 14 டன் ரேஷன் அரிசி கடத்திச் சென்றது கண்டறியப்பட்டது. உடனே, காவலர்கள் லாரி ஓட்டுநரான கன்னியாகுமரியைச் சேர்ந்த ராஜேஷ், ரேஷன் அரிசி ஏற்றிவிட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த மணிகண்டபிரபு ஆகியோரைக் கைதுசெய்தனர். மேலும், கேரளாவைச் சேர்ந்த லாரி உரிமையாளர் ரிஜோ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நான்கு லாரிகள் பறிமுதல்
இதைத்தொடர்ந்து, திருநெல்வேலி கொங்கந்தான்பாறை அருகே நடந்த சோதனையின்போது ஆறுமுகநயினார் என்பவருக்குச் சொந்தமான குடோனில் சுமார் 11 டன் ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டது.
இது தொடர்பாக, தூத்துக்குடியைச் சேர்ந்த வேலுமணி கைதுசெய்யப்பட்டார். அரிசி குடோன் உரிமையாளர் ஆறுமுகநயினார், லாரி உரிமையாளர் நெய்யாற்றங்கரை வினுகுமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேலும், நடந்த தொடர் சோதனையில் மற்றொரு லாரியில் 18 டன் ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக, கன்னியாகுமரியைச் சேர்ந்த செபஸ்டின்ராஜ் கைதுசெய்யப்பட்டார். மொத்தத்தில் ஒரேநாள் இரவில் நடந்த சோதனையில் திருநெல்வேலியில் சுமார் 58 டன் ரேஷன் அரிசி, 4 லாரிகள் பறிமுதல்செய்யப்பட்டன.
குண்டர் பாயும்
இது குறித்து கண்காணிப்பாளர் பாஸ்கரன் செய்தியாளரிடம் கூறுகையில், "ரேஷன் அரிசி கடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இதுவரை மதுரை மண்டலத்தில் மட்டும் கடந்த ஆறு மாதங்களில் மூன்றாயிரம் டன் ரேஷன் அரிசி பிடிபட்டுள்ளது.
15 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடியில் பயோ டீசல் இருந்த நான்கு டேங்கர் லாரிகள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன. ரேஷன் அரிசி கடத்தலுக்கு உதவியாக யார் இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
ரேஷன் கடை பணியாளர்கள் உடந்தையாக இருந்தால் அவர்களும் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்படுவார்கள். இந்தக் கடத்தலில் தொடர்புடைய ரிஜோ ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு, தற்போதுதான் வெளியே வந்துள்ளார்" என்றார்.
இதையும் படிங்க: குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து - சிதைவு பாகங்கள் சேகரிப்பு