சென்னை: ராயப்பேட்டை காசிம் தெருவை சேர்ந்தவர் தாவித்ராஜா (20). இவர் ஜூன் 14ஆம் தேதி, ராயப்பேட்டை ஓய்எம்சிஏ வாயில் அருகே உள்ள குப்பை தொட்டியோரம் மயங்கிய நிலையில் கிடந்தார். அப்போது, அவ்வழியாக ஆட்டோவில் வந்த அவரது தாய் தேவி, மகன் மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
இயற்கைக்கு மாறான மரணம்: அங்கு ராஜாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து, தாய் தேவி தனது மகன் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
உடற்கூராய்வு அறிக்கையில், தலையில் தாக்கப்பட்டதால் தாவித் ராஜா இறந்துள்ளதாக தெரியவந்தது. இதனையடுத்து சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது, 13ஆம் தேதி இரவு ஒரு ஆணும், பெண்ணும், ராஜாவை இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்து ஒய்எம்சிஏ வாயில் அருகே உள்ள குப்பை தொட்டியோரம் படுக்கவைத்து விட்டு சென்றது தெரியவந்தது.
போதை பொருள் விற்பனை: இதனையடுத்து,தாவித் ராஜா வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணை அடிப்படையில், ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த சங்கீதா என்ற ரோஸி, ஜீவா, பார்த்திபன், ராயப்பேட்டையை சேர்ந்த ராஜேஷ் என்ற ராக்கி ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
தொடர் விசாரணையில் ரோஸி கஞ்சா, போதை மாத்திரை வியாபாரி என்பதும், ஜீவா, பார்த்திபன், ராஜேஷ் ஆகிய இளைஞர்களை வைத்து கஞ்சா, போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்தது.
"அக்கா கேங்க்" என்ற பெயர் வைத்து கொண்டு ரோசி உடல் முழுவதும் டேட்டூ குத்திக்கொண்டு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் தாவித் ராஜா, இந்த அக்கா கேங்கில் சேர்ந்து ரோசி மற்றும் அவரது கூட்டாளிகளுடன் கஞ்சா, போதை மாத்திரைகளை உட்கொண்டு சுற்றி வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.