தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

சிம் ஸ்வாப்: ரூ.25 லட்சம் கொள்ளையடித்த வட மாநில கும்பல் - ரூ25 லட்சம் பணம் கொள்ளை

சிம் ஸ்வாப் முறையில் மோசடி செய்த கும்பலை இரண்டு நாள்கள் காவல் துறை காவலில் எடுத்து விசாரணை செய்ததில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏர்டெல் சிம்கார்டு நிறுவன மண்டல அலுவலரிடம் மத்தியக் குற்றப்பிரிவு காவல் துறையினர் வரும் திங்கள்கிழமை விசாரணை செய்யவுள்ளனர்.

சிம் சுவாப் மூலம் ரூ25லட்சம் கொள்ளையடித்த வடமாநில கும்பல்
சிம் சுவாப் மூலம் ரூ25லட்சம் கொள்ளையடித்த வடமாநில கும்பல்

By

Published : Jan 6, 2022, 4:32 PM IST

சென்னை:சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில், சிம் ஸ்வாப் எனப்படும் நூதன முறையில் மோசடி செய்து மருத்துவமனை நிர்வாகத்தின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.25 லட்சம் கொள்ளையடித்த வடமாநில கும்பலை மேற்கு வங்கத்திலிருந்து மத்தியக் குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறையினர் கைதுசெய்தனர்.

உ.பி.யில் பதுங்கியிருக்கும் மோசடிக் கும்பல் தலைவன்

கைதுசெய்யப்பட்ட நான்கு பேரையும் இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. இந்த அடிப்படையில், கைதுசெய்யப்பட்ட ரோகன், ராகேஷ்குமார் சிங், சயந்தன் முகர்ஜி, ராகுல் ராய் ஆகிய நான்கு பேரையும் கடந்த இரண்டு நாள்களாக சைபர் கிரைம் காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த மோசடி கும்பல் தலைவன் சதீஷ் என்பவர் உத்தரப் பிரதேசத்தில் பதுங்கியிருப்பதை சைபர் கிரைம் காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். கும்பல் தலைவனைப் பிடிக்க தனிப்படைக் காவல் துறையினர் உத்தரப் பிரதேசம் விரைந்துள்ளது.

இந்நிலையில், கைதுசெய்யப்பட்ட நான்கு பேரில், ஒருவருக்கு மட்டுமே இந்த மோசடி எவ்வாறு நிகழ்கிறது என்பது தெரிந்து ஈடுபட்டதாகக் காவல் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

போலி ஆவணங்கள் மூலம் மோசடி

மற்றவர்கள் மோசடி செய்யும் பணத்தை வங்கிக் கணக்கிற்கு மாற்றி அதை ஏடிஎம் மூலம் எடுப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட தரகர்கள் எனத் தெரியவந்துள்ளது. மேலும் கும்பல் தலைவன் சதீஷ் யார் யாரிடம் தொடர்புகொண்டு பேசியுள்ளார், எத்தனை பேரை இந்த முறையில் மோசடி செய்துள்ளார் என்பது குறித்த தகவல்களை வாக்குமூலமாகப் பெற்றுள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் பயன்படுத்திய வங்கிக் கணக்கு அனைத்தும் போலி முகவரிகள், போலி ஆதார் அட்டை உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி நூற்றுக்கணக்கான வங்கிக் கணக்குகளை உருவாக்கியதைக் கண்டறிந்த காவல் துறையினர், இந்தப் போலி ஆதார் அட்டை குறித்து ஆதார் நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு மத்தியக் குற்றப்பிரிவு காவல் துறையினர் கடிதம் எழுதியுள்ளனர்

சிம் ஸ்வாப் கொள்ளை முறை குறித்து விசாரணை

மேலும், இந்த நூதன முறை மோசடியில் முக்கியமாகப் பார்க்கப்படும் சிம் ஸ்வாப் முறை குறித்து விளக்கம் கேட்பதற்கு, சம்பந்தப்பட்ட சிம்கார்டு மண்டல அலுவலரிடம் விளக்கம் கேட்பதற்குக் காவல் துறையினர் அழைத்துள்ளனர்.

குறிப்பாக முறையாகச் சோதனை செய்யாமல் சிம் கார்டு, ஆன்லைன் மூலம் மாற்றப்பட்டது எவ்வாறு என விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். வரும் திங்கள்கிழமை மத்தியக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் மண்டல அலுவலரிடம் விசாரணை நடத்த உள்ளதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், இதேபோன்ற பாணியில் தாம்பரம், காரைக்கால், திருச்சி உள்ளிட்ட இடங்களிலும் திருட்டு நடந்துள்ளதாகக் காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளதால், அந்த மாவட்டக் காவல் துறையிடம் தகவல் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

இதையும் படிங்க:இந்திய பங்குச் சந்தைகள் திடீர் சரிவு

ABOUT THE AUTHOR

...view details