சோவல் இந்தியா பிரைவேட் லிமிட்டெட் நிர்வாக இயக்குநர்களான தென் கொரியாவைச் சேர்ந்த சொய் யங் சக், சொய் ஜவோன் ஆகியோர் மீது பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவில் ஜிஎஸ்டி வரி (சரக்கு - சேவை வரி) ஏய்ப்பு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. பின்னர் அவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த சோய் யாங் சக், சோய் ஜொவான் ஆகிய இருவரும், தாங்கள் வெளிநாட்டவர் என்பதால் தங்குமிடம், கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள காவலர்களின் செலவை தாங்களே ஏற்றுக்கொள்வதாகக் கூறி செங்கல்பட்டில் உள்ள ஒரு இடத்தில் வீட்டுக் காவலில் இருக்க அனுமதி பெற்றனர்.
இந்நிலையில், தங்களது ஓட்டுநர் மூலம் இருவரும் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி வெளிநாட்டிற்குத் தப்ப முயலுவதாக ரகசியத் தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், "தென்கொரியா நாட்டைச் சேர்ந்த இருவரும் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களைப் போலியாகத் தயார்செய்து அதன்மூலம் பெங்களூருவிலிருந்து மணிப்பூர் சென்று, அங்கிருந்து விமானம் மூலம் மியான்மர், இந்தோனேசியாவிற்கும் - தொடர்ந்து அங்கிருந்து தென் கொரியாவிற்கும் தப்பிச் செல்ல திட்டம் தீட்டியது" தெரியவந்தது.
இதனையடுத்து போலி ஆவணங்களைப் பயன்படுத்தி குற்றச்செயல்புரிதல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின்கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அப்போது இவ்வழக்கிலும் வீட்டுக்காவல் வேண்டி இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தனர். ஆனால் அவர்களது மனு நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில் தென் கொரிய நாட்டவர் இருவரையும் காவல் துறையினர் சிறையில் அடைக்கவிருந்த நிலையில் அவ்விருவரும் செங்கல்பட்டு வீட்டுக் காவலிலிருந்து தப்பிச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவர்கள் இருவரும் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றுள்ளனரா என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: கோயில் விழா: சன்னி லியோனின் தியான புன்னகை - பரவசத்தில் ரசிக பக்தர்கள்