தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேற்று (ஜூலை 6) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ஐந்து நபர்களில் நான்கு பேர் கைது செய்யபப்பட்டுள்ளனர். தலைமறைவான மற்றொரு நபரை தனிப்படை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சந்தேகத்தில் விசாரணை
இதேபோல், கஞ்சா விற்பனையை தடுப்பதற்காக காவல்துறையினர் ரோந்து மேற்கொண்டனர். அப்போது, சந்தேகத்தின்பேரில் ஒருவரிடம் விசாரணை நடத்தியதில் அவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக யமகா முருகன், ஜான்சன் பெலிக்ஸ் என இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் யமகா முருகன் மீது பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன.
86 பேர் மீது குண்டாஸ்
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தற்காப்புக்காக வெடிகுண்டுகள் தயாரித்து வைத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தூத்துக்குடியில் 155 கஞ்சா வழக்குகள் போடப்பட்டு 181 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 60 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா விற்ற எட்டு பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுவரை, மொத்தம் 86 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கரோனா ஊரடங்கு காலத்தில் கடல் வழியாக தமிழ்நாடு ஊடுருபவர்களை தடுப்பது மரைன் காவலகர்கள், கடலோர காவல்படை, சட்டம் ஒழுங்கு காவல்துறையின் கூட்டு முயற்சியால் செய்யக்கூடியது. இதற்கான எல்லா முயற்சிகளும் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.
இதையும் படிங்க: ஹேக்கர்கள் மிரட்டுகிறார்கள்... குமரியில் புகார்