சென்னை:சென்னை போரூர் காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் அப்பாவு (62). இவர், சென்னை நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் இயங்கி வரும் விவிலியா ட்ரான்ஸ்போர்ட் & லாஜிஸ்டிக்ஸ் என்ற நிறுவனத்தை நடத்திவரும் அருண் என்பவரிடம் செப்டம்பர் மாதம் 20 ஆயிரம் ரூபாய்க்கு காரை மாத வாடகைக்கு விட்டுள்ளார்.
ஒரு மாதம் வாடகை செலுத்திய அருண், பின்னர் வாடகை தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால், அப்பாவு காரை திரும்ப கேட்டதற்கு அருண் தலைமறைவாகிவிட்டது தெரியவந்தது.
மோசடி
இதுகுறித்து, அப்பாவு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அருண் என்கிற அருண் குமார் என்பவர் அப்பாவு உள்பட 21 பேரிடம் கார்களை வாடகைக்கு பெற்று ஒரு மாதம் மட்டும் வாடகை செலுத்தி, பின்னர் வாடகைக்கு பெற்ற கார்களை லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு அடமானம் வைத்து மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.
சிறையில் இருந்த குற்றவாளி
இதனிடையே சென்னை நொளம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கார்களை வாடகைக்கு வாங்கி இயக்கி வரும் தனியார் நிறுவனத்தில் அருண் மேலாளராக இருந்துள்ளார்.
அப்போது இதேபோல் கார்களை வாடகைக்கு பெற்று அடமானம் வைத்து பணம் வாங்கி மோசடி செய்த குற்றத்திற்காக அக்டோபர் மாதம் நீதிமன்றத்தில் சரணடைந்து நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.
இதையடுத்து நுங்கம்பாக்கம் காவலர்கள் சிறையில் இருந்த அருண்குமாரை சட்டப்படி கைதுசெய்து நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்தனர்.
ஜிபிஎஸ் மூலம் கண்டுபிடிப்பு
விசாரணையில் அருண், தரகர்கள் மூலம் கார்களின் எப்.சி மற்றும் ஆர்.சி புத்தகங்களை வைத்து ஒரு காருக்கு ரூ. 3 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை பணம் பெற்றுக்கொண்டு அடமானம் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அவர் அளித்த தகவலின்பேரில் வாடகைக்குக் கொடுத்த இரண்டு கார்களில் பொருத்தப்பட்டுள்ள ஜிபிஎஸ் கருவிகளை கொண்டு தனிப்படை காவலர்கள் தீவிர விசாரணை செய்தனர். அதில், கார்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் இருப்பது தெரியவந்தது.
அருணிடமிருந்து மீட்கப்பட்ட வாடகை கார்கள் இதனால், தூத்துக்குடி மாவட்டத்திற்கு விரைந்த தனிப்படை காவலர்கள், அங்கிருந்த இரண்டு கார்கள் கைப்பற்றி விசாரணை செய்தனர்.
தென் மாவட்டங்களில் அடமானம்
தரகர்கள் தனிப்படை காவலர்களிடம் அளித்த தகவலின் பேரில், காவலர்கள் தீவிர விசாரணை நடத்தி தூத்துக்குடிய மாவட்டத்தில் ஏழு கார்கள், திருநெல்வேலி மாவட்டத்தில் 2 கார்கள், திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு கார் என மொத்தம் 12 கார்களை, அருண் அடமானம் வைத்த நபர்களிடமிருந்து மீட்டனர்.
மேலும், மற்ற அடமான கார்களை மீட்க தனிப்படை காவலர்கல் தீவிர விசாரணை மற்றும் தேடுதல் வேட்டை நடத்தி வைக்கின்றனர். விசாரணைக்கு பின்னர் அருண்குமார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: அம்பத்தூரில் முன்விரோதம் காரணமாக மூவருக்கு அரிவாள் வெட்டு