வேலூர்: உலகின் மனிதன் வாழ்ந்த காலத்தை கற்காலம், பெருங்கற்காலம், நவீன கற்காலம் என மூன்று வகையாக பிரிக்கலாம். இவை மூன்றும் காலத்தை மட்டுமின்றி மனித நாகரீக வளர்ச்சியையும் குறிப்பவையாக உள்ளன.
அந்த வகையில் மனித நாகரீகத்தின் இடப்பட்ட காலமான பெருகற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் வேலூர் மாவட்டத்தில் கிடைத்துள்ளன. வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்திலும், வேலூர் மாநகராட்சிக்கு உள்பட்ட சின்ன அல்லாபுரம் அடுத்துள்ள பாறைமேடு பகுதி ஆகிய இரு இடங்களிலும் பெருங்கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளமான ஈமச்சின்னம் கேட்பாறின்றி கிடக்கின்றன.
ஈமச்சின்னங்கள்
இது குறித்து வரலாற்று ஆர்வலர் சுகவன முருகன் கூறுகையில், “இது போன்ற சின்னங்கள் தமிழ்நாட்டில் ஏராளமாக உள்ளன. குறிப்பாக வேலூரில் தற்போது கவனம் பெற்றுள்ள இரண்டு ஈமச்சின்னங்களும் பெருங்கற்காலத்தை அல்லது இரும்பு காலத்தை சேர்ந்தவை ஆகும். இந்த இரண்டும் கல்திட்டை என்கின்ற வகையை சார்ந்தவை.
இவற்றின் அருகே அந்த காலத்தில் வாழ்ந்து மறைந்த மனிதர்களின் ஈமப் பொருள்களான சாம்பல், எழும்புகள் ஆகியவற்றை குடங்களில் வைத்திருப்பார்கள். தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட கொடுமணல், பொருந்தல் ஆகிய அகழாய்வுகள் இது போன்ற கல்திட்டைகளில் மீது செய்யப்பட்டவை ஆகும். மிக முக்கியமாக வேலூரில் இது போன்று கல்திட்டைகள் அதிகமான எண்ணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன” என்றார்.
5000 ஆண்டுகள் பழமை
மூன்று கற்கள் மீது தட்டையான மிகப்பெரிய சுமார் 5 முதல் 8 டன் வரை எடை கொண்ட பாறை பொருத்தப்பட்டிருக்கும். 5000 ஆண்டுகளுக்கு முன்பு இது போன்ற எடை கொண்ட கல்லை எப்படி தூக்கி வைத்தனர் என்பதே மிகப் பெரிய கேள்வி. தமிழர்களின் வரலாற்றையும் அவர்களது தொன்மையையும் இதன் மூலம் அறிந்துகொள்ளலாம் என்கிறார் தபால் தலை சேகரிப்பாளர் மற்றும் வரலாற்று ஆர்வலரான தமிழ்வாணன்.
வேலூர் ஈமச்சின்னங்கள் பாதுகாக்கப்படுமா? வேலூர் மாவட்டம் பல்வேறு வரலாற்று சிறப்புகளை தாங்கி நிற்கும் போதிலும் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய மனித நாகரிகத்தை பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது. இந்தப் பெருங்கற்கால மனிதர்களின் நினைவு சின்னங்களை அரசு பாதுகாக்க முன்வர வேண்டும். இதுபோன்ற சின்னங்களை முறையாக ஆவணப்படுத்தினால் வரலாற்று ஆய்வு மாணவர்களுக்கும் பயனளிக்கும் என்கின்றனர் ஆர்வலர்கள்.
கோரிக்கை
தமிழ்நாடு தொல்லியல் துறையோ அல்லது மத்திய தொல்லியல் துறையோ (ASI) இதனை கையில் எடுத்து இச்சின்னங்கள் அமைந்துள்ள இடத்தை சுற்றி பாதுகாப்பு வேலி ஏற்படுத்தி அந்த இடத்தில் இது குறித்த ஒரு தகவல் பலகையை வைத்து பாதுகாக்க வேண்டும்.
வேலூர் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இது குறித்த சிறு குறிப்பை பதிவேற்ற வேண்டும், மேலும் இது போன்ற அனைத்து சின்னங்களையும் அரசாங்கமே பாதுகாக்க முடியாது என்பதால் வரலாற்று ஆய்வாளர்களும், தன்னார்வலர்களும் முன்வந்து பாதுகாக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர் வரலாற்று ஆர்வலர்கள்.
இதையும் படிங்க: 'இவன் என் மகன்! கண்ணும் கருத்துமாக வளர்க்கிறேன்'- கண்ணகி