கிருஷ்ணகிரி: வேலூர், திருவண்ணாமலை, கடலூர், தர்மபுரி உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் உள்ள அரசு பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரிகளின் வேலூர் மண்டல தொழில் நுட்பக் கல்வி செயற்பொறியாளராக பணியாற்றி வருவபர் ஷோபனா(57) .
ஆறு மாவட்டங்களில் உள்ள அரசுக் கல்லூரிகளின் கட்டடம் கட்ட ஒப்பந்தம் விடுதல், அதற்கான நிதி ஒதுக்குதல் போன்றவை இவரது பணிகளாகும். இந்த பணிகளை மேற்கொள்ள லஞ்சம் பெறுவதாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்கள் நேற்று முன்தினம் இரவு (நவ. 2) ஷோபனாவை பின் தொடர்ந்து, அவரது காரை சோதனை செய்தனர். அப்போது, வாகனத்தில் உரிய ஆவணம் இல்லாமல் இருந்த ஐந்து லட்சம் ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.
வீட்டிலும் சோதனை
பின்னர், தந்தை பெரியார் அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் ஷோபனா தங்கியுள்ள குடியிருப்பில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாக சோதனை செய்தனர். அங்கு இருந்த ரூ. 15.85 லட்சம் ரொக்க பணம், ரூ.4 லட்சம் மதிப்பிலான மூன்று காசோலைகள், 18 ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டது.
அரசு அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை இதனை தொடர்ந்து ஷோபனாவின் சொந்த ஊரான கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நேரு நகர் 2வது குறுக்கு தெருவில் உள்ள அவரது வீட்டில் கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர்.
அப்போது வீட்டின் பல்வேறு இடங்களில் கட்டுக்கட்டுக்காக பணத்தை கண்டறிந்து காவலர்கள் பறிமுதல் செய்தனர். இதில், இரண்டு கோடியே 6 லட்சத்து 90 ஆயிரத்து 300 ரூபாய் ரொக்கப் பணமும், 38 சவரன் தங்க நகைகள், ஒரு கிலோ 320 கிராம் வெள்ளி, 27 லட்சத்து 98 ஆயிரம் மதிப்புள்ள நிரந்தர வைப்புத் தொகைக்கான பத்திரங்கள், உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: மண்டல தொழில் நுட்பக்கல்வி செயற்பொறியாளரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: ரூ.21 லட்சம் பறிமுதல்!