வேலூர் சத்துவாச்சாரி குறிஞ்சிநகர் மந்தைவெளியில் பாலாற்றங்கரையை ஒட்டி குடியிருப்பு பகுதியில் புதியதாக அரசு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. இதற்கு அப்பகுதி பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த வாரம் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து, கடந்த திங்கள்கிழமை (ஏப்.11) வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறிஞ்சிநகர் பகுதியைச் சேர்ந்த பெண்கள் டாஸ்மாக் கடையை மூடக் கோரி மனு அளித்தனர். அரசு டாஸ்மாக்கை அகற்றக் கோரி பெண்கள் அளித்த மனுவின்பேரில், அதிகாரிகள் எந்த விதமான நடவடிக்கை எடுக்காமல் கடையைத் தொடர்ந்து திறந்து வைத்திருந்தனர்.
அரசு அமைக்கும் புதிய டாஸ்மாக்கிற்கு பெண்கள் எதிர்ப்பு இதனால், இன்று (ஏப்.13) காலை முதல் அப்பகுதி பெண்கள் மற்றும் மாதர் சங்கத்தினர் 50க்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் கடை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், மதுக்கடை இன்று திறக்கப்படவில்லை. மேலும் பந்தல் அமைக்க முயற்சி செய்த போராட்டக்காரர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
கடையை நிரந்தரமாக மூடுவோம் என அலுவலர்கள் உறுதி அளிக்கும் வரையில் அந்த இடத்தை விட்டு நகர மாட்டோம் எனப் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களிடம் சத்துவாச்சாரி காவல் துறையினர் தொடர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: டாஸ்மாக் கடை தொடர்பான வழக்கு - நீதிமன்றம் உத்தரவு