ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காக பசுமை வீடுகள், தொகுப்பு வீடுகள் என மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தினாலும், மலைக்கிராம மக்களுக்கு அது இன்றும் எட்டாக்கனியாகவே உள்ளது. வேலூர் - திருவண்ணாமலை மாவட்ட எல்லையோரத்தில் உள்ள அமிர்தி வன உயிரியல் பூங்கா மலையடிவாரத்தில் அடர்ந்த விவசாயப் பகுதிகளுக்கு இடையே காளான் பூத்தது போன்று அமைந்துள்ளது அமிர்தி குக்கிராமம். விவசாயம் மட்டுமே தெரிந்த இக்கிராம மக்கள், தங்களுக்கு கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்து தங்கள் நிலங்களில் குடில் அமைத்து வாழ்ந்துவருகின்றனர்.
எந்த ஆடம்பரமும் இல்லாமல் இயற்கையோடு இணைந்து வாழ்ந்துவந்தாலும் தங்கள் குழந்தைகளின் நலனுக்காக கான்கிரீட் வீடு கட்டி நிம்மதியாக வாழ வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கனவாக இருக்கிறது. போதிய வருமானம் இல்லாததாலும், பலமுறை வருவாய்த் துறை அலுவலர்களிடம் மனு அளித்தும் அரசிடமிருந்து வீடுகட்ட எந்த உதவியும் கிடைக்காததாலும் வேதனையுடன் வாழ்ந்துவருகின்றனர் இப்பழங்குடிகள்.
வீட்டுக்காவல் ஒருபுறமிருக்க விவசாயத்தைக் காப்பதும் இவர்களுக்கு பெரும் சவாலாக இருக்கிறது. மலையடிவாரம் என்பதால் விலங்குகள் தானியங்களைச் சேதப்படுத்தி விளைவித்த பொருள்களை அறுவடை செய்ய முடியாமல் தவிக்கின்றனர். பலமுறை கோரிக்கைவைத்தும் விலங்குகளைக் கட்டுப்படுத்த வனத் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறுகின்றனர். கடைக்கோ, மருத்துவமனைக்கோ செல்ல பல கிலோமீட்டர் தூரம் அலைய வேண்டியுள்ளது எனக்கூறும் இவர்கள், ஊரின் அருகில் அமைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவமனை பெரும்பாலும் பூட்டியே கிடப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.