வேலூர்: கஸ்பா பஜார் தெரு பகுதியைச் சேர்ந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். நேற்று (டிசம்பர் 07) முதல் இன்று (டிசம்பர் 08) காலை வரை இரண்டு குழந்தைகளுக்கும் திடீரென வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று (டிசம்பர் 08) காலை 7.30 மணி அளவில் குழந்தைகளை தர்காவிற்கு தாயத்துக் கட்டுவதற்காக கூட்டிச்சென்றுள்ளனர். தொடர்ந்து பிரச்னை நீடித்ததால், கஸ்பா பகுதியில் உள்ள மருந்தகத்தில் இரண்டு குழந்தைகளுக்கும் மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்து வாங்கிக் கொடுத்துள்ளனர். மருந்தைச் சாப்பிட்ட சற்றுநேரத்தில் குழந்தைகள் சுயநினைவு இழந்துள்ளனர்.
தொடர்ந்து பிற்பகல் 12 மணி அளவில் வேலூர் பென்ட்லேண்ட் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு குழந்தைகளைப் பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே குழந்தைகள் இறந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் தற்போது காலரா நோய் பரவி வருவதனால், காலரா பாதிப்பு ஏற்பட்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளனரா, மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்து வாங்கிக் கொடுத்ததனால் அதில் பாதிப்பு ஏற்பட்டு உயிர் இழப்பு ஏற்பட்டிருக்குமா என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
இது குறித்து தகவலறிந்த வேலூர் தெற்கு காவல் துறையினர் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், இறப்புக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.