வேலூர்:சமீபத்தில் பெய்த மழை வெள்ளத்தால் விஞ்சிபுரம் பாலாற்றின் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இந்நிலையில் மாதனூர் தரைப்பாலத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கார்த்திகேயன், நந்தகுமார், மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் இன்று (நவ.30) நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ. வேலு, ”தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் இந்த ஆண்டு பெரும் மழை பெய்துள்ளது. 105 ஆண்டுகளுக்கு முன்னர் பெய்தது போன்ற மழை தற்போது பெய்துள்ளது.
ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் பெய்த மழையினால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், விரிஞ்சிபுரம் பாலம் 322 மீட்டர் அடித்துச் செல்லப்பட்டுள்ளது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், சுமார் 30 கோடியில் உயர்மட்டப் பாலம் இங்கு அமைக்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள மொத்த தரைப்பாலங்களின் எண்ணிக்கை ஆயிரத்து 287. இந்த ஆண்டு 648 மேல்மட்ட பாலங்கள் முதற்கட்டமாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பல இடங்களில் பாலத்தின் இணைப்பு சாலைகள் அறிக்கப்பட்டுள்ளன. 75 விழுக்காடு பாலங்கள் உடைந்துள்ளன.
மத்திய அரசிடம் நிவாரணம் கேட்டுள்ளோம். நெடுஞ்சாலைதுறைக்கு ஆயிரத்து 444 கோடி ரூபாய் கேட்டுள்ளோம். கன்னியாகுமரி, கடலூர் வேலூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. தற்காலிகமாக நெடுஞ்சாலைத்துறைக்கு சி.ஆர்.ஐ.டி.பி நிதி 200 கோடி ரூபாய் பயன்படுத்தபட உள்ளது. அதன் மூலம் உடனடியாக சாலைகளையும் பாலங்களையும் சீரமைக்க உள்ளோம்” என்றார்.
இதையும் படிங்க:Covid19 Restrictions: டிசம்பர் 15ஆம் தேதி வரை கரோனா கட்டுப்பாடுகள் நீட்டிப்பு - மு.க.ஸ்டாலின்