வேலூர் மாவட்டம் சேண்பாக்கத்தில் காட்பாடி தொகுதி திமுக வேட்பாளரும், அக்கட்சியின் பொதுச்செயலாளருமான துரைமுருகனை ஆதரித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “திமுக கூட்டணி வெற்றி பெற்றால், சிறந்த பொருளாதாரக் கொள்கையை உருவாக்கி ஜப்பான், கொரியா நாடுகளைப் போன்று தமிழகத்தை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாயிகளின் விளைபொருட்களுக்கு 50 விழுக்காடு லாபம் கொடுத்து அதனை அரசே கொள்முதல் செய்யும். 80 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மக்களை குழப்புவதற்காக எடப்பாடி பழனிசாமி பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். ஒன்றைக்கூட அவரால் நிறைவேற்ற முடியாது. கடந்த 10 ஆண்டுகளில் ஏன் அதனை அவரது கட்சி நிறைவேற்றவில்லை.
எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலைத்துறை 2,500 கோடி ஊழல் குற்றச்சாட்டு வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. ஆனால் அதற்கு முன்னதாகவே பழனிசாமி உடனடியாக உச்ச நீதிமன்றத்திற்கு சென்று தடையாணை பெற்றார். சிபிஐ மோடியின் கையில் இருப்பதால், இந்தத் தடை ஆணையை உடைக்க சிபிஐ எந்த முயற்சியும் செய்யவில்லை. அப்படி செய்திருந்தால் பழனிசாமி இன்று முதலமைச்சராக இருந்திருக்க முடியாது, இந்த ஆட்சியும் நிலைத்திருக்காது.
மோடியால் இந்த ஆட்சி நிலைத்திருக்கிறது! - கே.எஸ்.அழகிரி மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை அதிகரித்துள்ளது. மத்திய அரசு, ஒரே நாடு ஒரே கலாச்சாரம் என்பதை கொண்டு வர நினைக்கிறது. இதனால் பல மாநில மக்களின் அடையாளத்தை மாற்ற நினைக்கிறது. எனவே தமிழகம் வளர்ச்சியில் மேம்பட திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: ’கழுதையுடனா கூட்டணி வைப்பது...’ - தேமுதிக-அமமுக கூட்டணியைத் தாக்கும் புகழேந்தி