வேலூர் வடக்கு காவல் நிலையம், காட்பாடி காவல் நிலையத்துக்குள்பட்ட மூன்று செல்லிடப்பேசி விற்பனை அங்காடிகளில் சமீபத்தில் கொள்ளையர்கள் அடுத்தடுத்து கைவரிசை காட்டினர். அதில், ரூ.45 லட்சத்துக்கும் அதிகம் மதிப்பிலான 150-க்கும் மேற்பட்ட செல்லிடப்பேசிகள் கொள்ளையடிக்கப்பட்டன. இது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணையில் இறங்கினர்.
வேலூரில் தொடர் திருட்டில் ஈடுபட்ட கொள்ளையர்களின் புகைப்படம் வெளியீடு! - கொள்ளையர்கள் போட்டோ வெளியீடு
வேலூர்: வேலூர், காட்பாடி பகுதிகளில் செல்லிடப்பேசி கடையில் தொடர் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களின் புகைப்படங்களைக் காவல் துறை வெளியிட்டுள்ளது.
கொள்ளைச் சம்பவம் நடந்த அனைத்துக் கடைகளிலும் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புப் படக்கருவிப் பதிவுகளை ஆய்வு செய்ததில், சம்பவம் நடைபெற்ற அந்த நேரத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் வட மாநிலத்தவர்கள் சுற்றித்திரிவது தெளிவாகப் பதிவாகியுள்ளது. படத்தில் உள்ளவர்களைப் பார்க்கும்போது பிகார், ஒடிசா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனக் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
வடநாட்டு கொள்ளையர்களின் புகைப்படங்களைத் தற்போது காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர். சந்தேகத்துக்குரிய நபர்களை வேலூர் மாவட்டத்தையும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் யாரேனும் பார்த்திருந்தாலோ, இப்போது பார்த்தாலோ உடனடியாக வேலூர் மாவட்ட காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகோள்விடுத்துள்ளனர்.