வேலூர்: பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், வேலூர் மாவட்டத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 101-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பகுதியை சேர்ந்த தமிழரசன் என்ற இளைஞர், பெட்ரோல் பங்கிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று ஒரு லிட்டர் பெட்ரோல் நிரப்பியுள்ளார்.
அதற்கான தொகை ரூ. 101 பணத்தை ஒரு மொய் கவரில் போட்டு அதன் மீது 'மணமகன்- [அரசாங்கம்]' மற்றும் 'Common People's கதறல்' என எழுதி மொய்யாக கொடுத்து சென்றுள்ளார்.
பெட்ரோல் விலை உயர்வுக்கு நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்த இளைஞர் இதுகுறித்து தமிழரசன் கூறுகையில், "என்னைப்போன்ற கூலி வேலை செய்பவர்கள் கரோனா ஊரடங்கால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய சூழலில் இருசக்கர வாகனம் அத்தியாவசியம் என்ற நிலையில், இதற்கு பெட்ரோல் போடவே குறிப்பிட்ட தொகை செலவு செய்கிறேன்" என தெரிவித்தார். திருப்பூர் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்த தமிழரசன் கரோனா ஊரடங்கால் வேலை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'பேருந்துகள் இயங்க அனுமதி: கோவையில் 625 நகரப் பேருந்துகள் இயக்கம்!'