தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

யூடியூப் பார்த்து கொள்ளையடித்த கொள்ளையன் - robber has been arrested

ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை ஐந்தே நாள்களில் கைது செய்து அனைத்து நகைகளையும் வேலூர் மாவட்ட காவல் துறையினர் மீட்டுள்ளனர். கொள்ளையன் யூடியூப் காணொலிகள் பார்த்து கொள்ளையடிக்க கற்றுக் கொண்டது தெரியவந்துள்ளது.

வேலூர் மாவட்ட காவல் துறையினர்
வேலூர் மாவட்ட காவல் துறையினர்

By

Published : Dec 21, 2021, 7:38 AM IST

Updated : Dec 21, 2021, 7:22 PM IST

வேலூர்: தோட்டப்பாளையம் காட்பாடி சாலையிலுள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையில் கடந்த டிசம்பர் 15ஆம் தேதி சுவற்றில் துளையிடப்பட்டு தங்கம், வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இது குறித்து தகவல் கிடைத்தவுடன் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன், வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் ஏ.ஜி. பாபு ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

நகைக்கடையின் உள்ளே இருந்த கண்காணிப்பு கேமராக்களில் ஸ்பிரே அடித்து நகைகளைத் திருடி சென்றதும், கொள்ளையன் முழுமையாக சிங்கம் உருவத்துடன் கூடிய மாஸ்க் மற்றும் தலையில் விக் அணிந்து சென்றதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இந்நிலையில், தீவிர விசாரணைக்குப் பிறகு கொள்ளையனை கண்டுபிடித்து அவனிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட அனைத்து நகைகளையும் வேலூர் மாவட்ட காவல் துறையினர் மீட்டுள்ளனர்.

யூடியூப் பார்த்து கொள்ளையடித்த கொள்ளையன்

புலன் விசாரணை

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் ஏ.ஜி. பாபு கூறுகையில், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நேரடி தலைமையில் எட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இவர்கள் பல்வேறு கோணங்களில் புலன் விசாரணை செய்து ஐந்து நாள்களிலேயே குற்றவாளியைக் கைது செய்து கொள்ளையடிக்கப்பட்ட எட்டு கோடி மதிப்பிலான சுமார் 16 கிலோ தங்கம், வைர நகைகளை மீட்டுள்ளனர். இதில் குறிப்பிடும்படியாக தனிப்படையினர், விஞ்ஞானப் பூர்வமாகவும், பழைய முறைகளை பின்பற்றியும் புலன் விசாரணை மேற்கொண்டனர்.

கொள்ளையடிக்கப்பட்ட நகைகள்

கைது

இரவு, பகல் பாராமல் கடுமையாக உழைத்து குற்றவாளியைக் கைது செய்துள்ளனர். குச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 22 வயதான டீக்காராமன் என்பவர் இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.

அவரை நேற்று (டிச. 20) பிற்பகல் ஒடுகத்தூர் அருகே காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஒடுகத்தூர் பகுதியிலுள்ள சுடுகாட்டில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை வைத்திருப்பது தெரிய வந்தது.

அதனை அவரிடமிருந்து கைப்பற்றினர். மேலும், இக்குற்றச் சம்பவத்தில் வேறு யாரேனும் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்தும் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவர் மீது குடியாத்தம் பகுதியில் இருசக்கர வாகனங்களை திருடியதற்கான இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கொள்ளையடிக்கப்பட்ட நகைகள்

அலாரம் பழுது

இந்த நகைக்கடையில் பர்களரி அலாரம்(Burglar Alarm), அதாவது அத்துமீறி கடையினுள் நுழைந்தால் ஒளி எழுப்பும் கருவி இருந்தும் வேலை செய்யவில்லை. மேலும், அந்த அலாரம் வேலை செய்கிறதா என்பதையும் கடையின் நிர்வாகத்தினர் சோதனை செய்யவில்லை.

இன்னொரு மிகப்பெரிய பிழை சிசிடிவி கேமிரா கடையினுள் மட்டுமே பொருத்தப்பட்டிருந்ததே தவிர கடையின் பின்புறம் மற்றும் அதனைச் சுற்றியுள்ளப் பகுதிகளில் பொருத்தப்படவில்லை.

யூடியூப் பார்த்து கொள்ளையடித்த கொள்ளையன்

துளையிட்டுக் கொள்ளை

கொத்தனாராக பணியாற்றி வரும் கொள்ளையன் பத்து நாள்கள் திட்டமிட்டு, ஒவ்வொரு இரவும் வந்து பொறுமையாகத் துளையிட்டு இந்த கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளான் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் இரண்டு காவலாளிகள் காவல் பணியிலிருந்தும் அவர்கள் பின் பகுதிக்குச் சென்று பார்க்கவில்லை. இதனால், அந்தத் துளை அவர்களுக்குத் தெரியவில்லை.

சிசிடிவி பதிவுகளில் ஆய்வு

இது குறித்து கூறிய காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ் கண்ணன் கூறுகையில், ”கொள்ளையன் எந்த வழியாக தப்பித்து இருக்க முடியும் என்று நாங்கள் கணித்தோம். பிறகு எஎஸ்பி தலைமையிலான தனிப்படையினர் இரவு பகல் என 24 மணி நேரமும் அந்தப் பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை முழுமையாக அலசி ஆராய்ந்தனர். அதில் சந்தேகத்திற்கிடமாக இருக்கக்கூடிய நபர்களை டிராக் செய்து குற்றவாளியை கண்டுபிடித்துள்ளோம்.

யூடியூப் பார்த்த...

கடையின் உள்ளே சென்று கொள்ளையடிப்பதற்கு பத்து நாள்கள் தொடர்ந்து கடையின் பின்புறம் துளையிட்ட கொள்ளையன் 'சப்தமின்றி துளையிடுவது எப்படி' என்றும், இதற்கு முன் நடைபெற்ற பெரும் கொள்ளை சம்பவங்களில் என்ன தவறு நிகழ்ந்துள்ளது என்றும் ஆராய்ந்து அந்த தவறுகளை தான் கொள்ளையடிக்கும் போது நிகழாத வண்ணம் இருப்பதற்காக 'யுடியூப்பில்' உள்ள காணொலிகளை பார்த்துக் கற்றுக்கொண்டுள்ளான்.

மாட்டிக்கொண்ட கொள்ளையன்

குற்றவாளி ஒரு சிவன் பக்தன். ஆகவே, கொள்ளையடித்த நகையிலிருந்த ருத்ராட்ச மாலையை மட்டும் தன்னிடம் வைத்துக்கொண்டு மற்றவற்றை புதைத்து வைத்திருந்தான். முதலில் கிடைத்த அந்த ருத்திராட்ச மாலையின் மூலம் கொள்ளையனை பிடித்தோம்.

சிசிடிவி கேமிரா

இது போன்று தொழில்நுட்பத் தவறுகள் மேலும் நிகழாமல் இருப்பதற்கு தங்களது நிறுவனங்களில் பொருத்தியுள்ள சிசிடிவி கேமிராக்கள் முறையாக இயங்குகின்றனவா என்று தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் உதவியுடன் தொடர்ந்து ஆடிட் செய்ய வேண்டும்.

இதற்கென்று இருக்கக்கூடிய நிறுவனங்கள் ஆடிட் செய்தால் மட்டுமே நம்மிடம் இருக்கக் கூடிய தவறுகள் தெரியவரும். எனவே, இதனை அனைத்து நிறுவனங்களும் கடைபிடிக்க வேண்டும்.

மேலும், மாவட்டத்திலுள்ள வங்கிகள் மற்றும் இதுபோன்ற நகைக் கடைகள், பெரு நிறுவனங்கள் இந்த ஆடிட் முறையை பின்பற்றும்படி வலியுறுத்தி வருகிறோம் .

காவலர்களுக்கு பரிசு

இக்கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையனை கண்டுபிடிக்க உழைத்த அனைத்து காவலர்களுக்கும் பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்க உள்ளோம்” என்றார்.

இதையும் படிங்க:நாங்கள் எந்த உணவைச் சாப்பிட வேண்டும் எனச் சொல்ல நீங்கள் யார்? - மாணவியின் பேச்சும் முழுப்பின்னணியும்..!

Last Updated : Dec 21, 2021, 7:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details