வேலூர் மாவட்டம் கல்லாபாறை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி (34). இவருக்கும் ரெட்டியூர் பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவருக்கும் திருமணமாகி மதன் (11), விஜய் (9) என இரண்டு மகன்கள் உள்ளனர். ஜெயலட்சுமி கணவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த பத்து ஆண்டுகளாக தனது இரு மகன்களுடன் வாழ்ந்து வருகிறார். இதனிடையே ஜெயலட்சுமிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அரி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நெருக்கமாகிய இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்துள்ளனர்.
இதனால் கர்ப்பமுற்ற ஜெயலட்சுமி ஒரு வாரத்திற்கு முன் பெண் குழந்தை பெற்றுள்ளார். திருமணத்தை மீறிய உறவால் உண்டான குழந்தை என்பதாலும், பெண் குழந்தை என்பதாலும் அக்குழந்தையைக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி தன் கைகளாலேயே குழந்தைக்கும் எருக்கம் பால் ஊற்றி கொன்றுள்ளார்.
கொலை செய்தது யாருக்கும் தெரியக் கூடாது என்பதற்காக குழந்தையின் சடலத்தை ஒரு சாக்கு மூட்டையில் கட்டி அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவருக்குச் சொந்தமான தண்ணீர் இல்லாத பாழடைந்த கிணற்றில் வீசிவிட்டு யாருக்கும் தெரியாமல் அமைதியாக இருந்துள்ளார்.
சடலத்தை வீசி நாள்கள் செல்ல செல்ல கிணற்று வழியாகச் சென்றவர்களுக்கு துர்நாற்றம் வீசியுள்ளது. இவ்விவகாரம் கிராமம் முழுவதும் தெரியவர, நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஜெயலட்சுமி, குழந்தையைப் பெற்றெடுத்து அதற்கான அறிகுறிகள் இல்லாமல் சாதாரண பெண்ணாக இருந்ததைக் கண்டு சந்தேகமடைந்த கிராம மக்கள் அவரிடம் விசாரித்துள்ளனர். கிராம மக்கள் ஒன்றுகூடி கேட்டதையடுத்து பயந்த ஜெயலட்சுமி தான் குழந்தையைக் கொன்றதை ஒப்புக்கொண்டார்.
சாக்கு மூட்டையில் குழந்தையின் சடலம் உடனடியாக கிராம நிர்வாக அலுவலர் தீபாவுக்கு இதுதொடர்பாக கிராம மக்கள் தகவல் அளித்தனர். பின்னர் தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த வேப்பங்குப்பம் காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சாக்கு மூட்டையில் வீசப்பட்ட குழந்தையின் சடலத்தைக் கைப்பற்றினர்.
உடற்கூறாய்வுக்காக வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையைக் கொன்ற ஜெயலட்சுமியைக் கைது செய்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் எருக்கம் பால் ஊற்றி பெண் குழந்தைகளைக் கொலை செய்வது தொடர்கதையாகியுள்ளதால், இதுபோன்ற கொலைகள் இனி நடைபெறாமல் இருக்க அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக செயற்பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க:பெண் சிசுவை எருக்கம் பால் கொடுத்து பெற்றோர் கொன்ற கொடூரம்!