வேலூர் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தின் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக வாக்கு சாவடி தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் இன்று(பிப். 10) நடைபெற்றது. அதில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கலந்து கொண்டார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன் பேசியதாவது, கிருபானந்த வாரியர் இறந்த போது முதலமைச்சராக இருந்தவர் ஜெயலலிதா. அன்று முதல் இன்று வரை அதிமுக சார்பில் அவருக்கு ஒரு மாலை கூட போடப்படவில்லை. அவர் இறந்த சமயத்தில் ஒரு அமைச்சர் கூட நேரில் சென்று மரியாதை செலுத்தவில்லை. அன்று காட்பாடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த அதிமுகவைச் சேர்ந்த ஒருவர் கூட மாலை அணிவிக்கவில்லை. நாங்கள் தான் அவரை அடக்கம் செய்து விட்டு வந்தோம். இறுதிவரை அங்கு தான் இருந்தோம். ஆகவே யாரோ சொல்லி இருப்பார்கள் வாரியார் சாமிக்கு அரசு விழா அறிவித்தால் எல்லோரும் ஏமாந்து வாக்களித்து விடுவார்கள் என்று, அதனால் இவர் அறிவித்து விட்டார். ஆனால் அவருக்கு உரிய மரியாதையை செலுத்தாதது அரசு அதிமுக என்றார்.
கர்நாடகாவிலிருந்து தமிழ்நாடு வந்த சசிகலாவுக்கு கொடுக்கப்பட்ட பிரம்மாண்ட வரவேற்பு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "நான் படித்த வரலாற்றில், நான் அறிந்த அரசியலில் இதுவரை தண்டனை பெற்று, சிறையிலிருந்து வெளியே வர வேண்டும் என்றால் 10 கோடி அபராதம் கட்ட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டு சிறையிலிருந்து விடுதலையானவருக்கு இது போன்ற வரவேற்பு அளிப்பது, தியாகத்திற்கும், கொள்ளை கூட்டத்திற்கும் வித்தியாசமே தெரியாமல் போய்விடும்" என்றார்.