வேலூர்:பள்ளிகொண்டா பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் (21). இவர் வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் பச்சை குத்தும் தொழில் செய்து வந்தார்.
இன்று (நவ.24) வழக்கம்போல் அப்பகுதியில் பச்சை குத்திக் கொண்டிருந்த சதீஷிடம், சலவன்பேட்டைப் பகுதியைச் சேர்ந்த கிஷோர் உள்ளிட்ட இரண்டு சிறுவர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி ஆயிரத்து 200 ரூபாய் பணம் பறித்துள்ளனர்.
பின்னர் கையில் கத்தியுடன் ரகளை செய்து கொண்டு மூவரும் இருசக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது அவர்களுக்கு பின்னால் வாகனத்தில் சென்று கொண்டிருந்த வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், அவர்கள் கையில் கத்தி வைத்திருப்பதை கண்டு இருசக்கர வாகனத்தை துரத்திப் பிடிக்கும் படி உத்தரவிட்டார்.
இந்நிலையில், வேலூர் சிஎம்சி அவுட் கேட் பகுதியில் எஸ்பி-யின் வாகனம் இருசக்கர வாகனத்தை மடக்கியது. அப்போது ஒருவர் இருசக்கர வாகனத்துடன் தப்பிச் சென்றார்.
விரட்டிப் பிடித்த மாவட்ட எஸ்பியின் பாதுகாவலர்
உடனடியாக எஸ்பியின் பாதுகாவலர் சதீஷ்குமார் பின்தொடர்ந்து சென்ற கிஷோர், சிறுவனை மடக்கிப் பிடிக்க முயன்றார். அப்போது, அவர்கள் கையில் வைத்திருந்த கத்தியால் சதீஷ்குமாரைத் தாக்க முயன்றனர்.
இதனால், பாதுகாப்பிற்காகக் கையில் இருத்தத் துப்பாக்கியைக் காட்டி இருவரையும் துப்பாக்கி முனையில் கைது செய்தார்.
பிறகு அவர்களிடமிருந்து ஆயிரத்து 200 ரூபாய் பணத்தையும் ஒரு செல்போன், ஒரு கத்தி, ஒரு அறிவால் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த வேலூர் வடக்கு காவல் துறையினர் அவர்களிடம் விசாரணையில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் நடைபெற்ற ஒரு மணி நேரத்தில் தப்பிச் சென்ற மற்றொரு சிறுவனையும் வேலூர் வடக்கு காவல் துறையினர் கைது செய்தனர்.
பட்டப்பகலில் கத்தியைக் காட்டி ரகளையில் ஈடுபட்டு பணம் பறித்த மூவரை எஸ்.பி உள்ளிட்ட காவல் துறையினர் துரத்திப் பிடித்த சம்பவம் மக்களிடையே பாராட்டைப் பெற்று வருகிறது.
இதையும் படிங்க:அரசு அலுவலர்களை செருப்பால் அடிக்க அனுமதிகேட்டு மனு: கலெக்டருக்கு ஷாக் கொடுத்த சமூக ஆர்வலர்