வேலூர்: பேர்ணாம்பட்டு, குடியாத்தம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த காலங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. இந்நிலையில் அப்பகுதிகளில் நில அதிர்வை உணரும் கண்காணிப்புக் கருவியைப் பொருத்த புவியியலாளர்கள், புவி இயற்பியலாளர்கள் இன்று (ஜனவரி 4) ஆய்வுமேற்கொண்டனர்.
2021 நவம்பர் 29ஆம் தேதி, குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை, மீனூர் ஆகிய பகுதிகளில் 3.6 ரிக்டர் அளவில் நில அதிர்வு உணரப்பட்டது. மேலும் கடந்தாண்டு டிசம்பர் 23ஆம் தேதி பேர்ணாம்பட்டு, தரைகாடு உள்ளிட்ட பகுதிகளிலும், ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியிலும் 3.5 ரிக்டர் அளவில் நில அதிர்வு உணரப்பட்டது.
இதனையடுத்து நில அதிர்வுக்கான காரணம் குறித்து சென்னை, கொல்கத்தாவைச் சேர்ந்த புவியியலாளர்களும், விஐடியைச் சேர்ந்த பேரிடர் மேலாண்மை பேராசிரியரும் தொடர் ஆய்வு மேற்கொண்டுவந்தனர்.
நில அதிர்வைக் கண்காணிக்கும் கருவி பொருத்தி அதன் அதிர்வு குறித்து ஆய்வுசெய்யப்படும் எனக் கூறப்பட்டிருந்த நிலையில், இன்று நில அதிர்வைக் கண்காணித்து, பதிவு செய்யக்கூடிய சீஸ்மோகிராஃப் (Seismograph) கருவியைப் பொருத்துவதற்கான ஆய்வுகளை புவியியலாளர்கள், புவி இயற்பியலாளர்கள் மேற்கொண்டனர்.