தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 12, 2021, 9:17 PM IST

ETV Bharat / city

வேலூரில் கொட்டித்தீர்த்த மழை - பொதுமக்கள் அவதி

வேலூரில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள நீர், அங்குள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

மழையால் இடிந்து விழுந்த கட்டடம்
மழையால் இடிந்து விழுந்த கட்டடம்

வேலூர்: வடகிழக்குப் பருவமழை காரணமாக நேற்று (நவ 11) மாலை 3 மணி முதல் பெய்யத் தொடங்கிய மழை, நள்ளிரவு வரை நீடித்தது.

அதிகபட்சமாக காட்பாடியில் 66 மி.மீ., மழையும், மாவட்டம் முழுவதும் சராசரியாக சுமார் 42 மி.மீ., மழையும் பதிவாகியுள்ளது.

இதனால், வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட ஓல்டு டவுன், உத்திர மாதா கோயிலுக்கு பின்புறம் வசித்து வரும் சவுந்தர், வெங்கடேசன், ஜெயகோபால் ஆகிய மூவரின் மூன்று சிமெண்ட் கூரை வீடுகளின் சுவர் இடிந்து விழுந்தன.

இதில் நல்வாய்ப்பாக யாருக்கும் எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லை. இரண்டு இருசக்கர வாகனங்கள் இடிபாடுகளில் சிக்கி முழுவதுமாக சேதமடைந்தன.

மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் அருகிலுள்ள உறவினர்கள் வீட்டில் தங்கியுள்ளனர். இவர்களுக்கு அரசு இதுவரை உதவவில்லை என்றும்; தங்களுக்கு அரசு விரைந்து உதவி செய்ய வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடியிருப்புகளுக்குள் புகுந்த வெள்ளநீர்

இதேபோல வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட சம்பத் நகர், முள்ளிப்பாளையம், கன்சால்பேட்டை ஆகியப் பகுதிகளில் வெள்ளநீர் குடியிருப்புகளுக்குள் புகுந்தது.

இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதிப்புக்குள்ளாகிள்ளனர். அதேபோல் காட்பாடி அடுத்த ஏறி முனைப் பகுதியில் இருக்கக்கூடிய சுமார் 40-க்கும் மேற்பட்ட வீடுகளில் கழிவு நீரோடு, சேர்ந்து வெள்ள நீர் புகுந்ததால் அப்பகுதி மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

அவர்களை காட்பாடி வருவாய்த் துறையினர் மீட்டு முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.

தண்ணீரில் மூழ்கிய தரைப்பாலம்

கடந்த காலங்களில் பெய்த கனமழை காரணமாக, ஏற்கெனவே வேலூர் பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் நேற்று பெய்த கனமழையினால் குடியாத்தம் மோர்தானா அணை நிரம்பி கௌண்டன்ய ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாகவும்; தற்போது வேலூர் பாலாற்றில் சுமார் 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

இதன் காரணமாக வேலூர் அடுத்த விரிஞ்சிபுரம் பாலாற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் முழுவதும் மூழ்கி போக்குவரத்து தடைபட்டுள்ளது.

ஆந்திராவை நீர்ப்பிடிப்பு பகுதியாக கொண்ட பொன்னை ஆற்றிலும் தற்போது 10 ஆயிரத்து 188 கனஅடிக்கு மேல் நீர் வந்து கொண்டிருப்பதால், பொன்னை தரைப்பாலம் முழுவதுமாக மூழ்கிப் போக்குவரத்து தடைபட்டுள்ளது.

பொன்னை ஆற்றின் கரையோரம் வசிக்கும் சுமார் 10-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மழை தந்த பாதிப்பு

வீடுகள் சேதம்

வேலூர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாகவும்; ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாகவும் வேலூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 241 ஏரிகளில், 106 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன.

தொடர் மழை காரணமாக இதுவரை மாவட்டத்தில் 46 ஹெக்டேர் அளவுக்கு பயிர்கள் சேதம் ஆகியுள்ளன. இதுவரை மூன்று பேர், மூன்று பசுமாடுகள் உயிரிழந்த நிலையில் 80-க்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

ஏழு ஊராட்சி ஒன்றியங்களில் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்டுள்ள அரசு முகாம்களில் சுமார் 121 குடும்பங்களைச் சேர்ந்த 403 பேர் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

அதேபோல மழை வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்தும் பாதிக்கப்பட்டோரை மீட்கும் பணியிலும் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.

இதையும் படிங்க:புதுச்சேரி: ஏரிகளைப் பார்வையிட்ட தமிழிசை

ABOUT THE AUTHOR

...view details