சென்னை:பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “பூவுலகின் நன்பர்கள், CREA, ASAR ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து தமிழ்நாட்டில் உள்ள அனல் மின் நிலையங்களில் இருந்து வெளியாகும் நச்சு வாயுக்களின் அளவு, நச்சுத்தன்மையின் அளவைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் ஃப்ளூ கேஸ் டிசல்ஃபரைசர் (FGD) கருவியைக் கொண்ட மின் உற்பத்தி நிலையங்களின் எண்ணிக்கையைக் கண்டறிந்தனர்.
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆன்லைன் தொடர் உமிழ்வு கண்காணிப்பு அமைப்பு (OCEMS), மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், NLC இந்தியா, தேசிய அனல் மின் நிறுவனம் ஆகியவற்றிலிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
நச்சுவாயுவைக் குறைக்கும் கருவிகள்
இந்த ஆய்வின்படி, தமிழ்நாட்டில் தற்போது இயங்கி வரும் 40 அனல் மின் நிலையங்களில் (13,160 மெகாவாட்) இரண்டில் மட்டுமே (1200 மெகாவாட்) ஃப்ளூ கேஸ் டிசல்பூரைசர் (எஃப்ஜிடி) பொருத்தப்பட்டுள்ளது. எட்டு மின் உற்பத்தி நிலையங்களுக்கு FGD உபகரணங்களை வாங்குவதற்கு ஏலம் கோரப்பட்டுள்ளது.
ஆனால் ஏலத்தில் பெரிய முன்னேற்றம் இல்லை. 30 அனல் மின் நிலையங்கள் அவை வெளியிடும் நச்சு வாயுவை குறைக்கும் நோக்கத்தில் FGD கருவி பொருத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் தமிழ்நாடு, என்எல்சியால் இயக்கப்படும் எந்த அனல் மின் நிலையங்களும் தங்கள் ஆலைகளில் எஃப்ஜிடி அமைக்க டெண்டர் கோரவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
76,000 உயிர்களை காப்பாற்றி இருக்கலாம்!
ஆய்வை மேற்கொண்ட CREAவின் உறுப்பினர் சுனில் தஹியா இது குறித்துப் பேசுகையில், “நாட்டில் உள்ள அனல் மின் நிலையங்களில் இருந்து வெளியாகும் நச்சு வாயுக்களுக்கான தரத்தை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் நிர்ணயித்துள்ளது. ஆலைகளில் இருந்து வெளியேறும் நச்சு வாயுவைக் குறைக்க இரண்டு ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்பட்டது.
ஆனால் சலுகைக் காலம் நீட்டிக்கப்பட்டு, மார்ச் 21, 2021க்குள் 2024/25 வரை சலுகைக் காலம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில், மாசு அளவைக் குறைக்க நடவடிக்கை எடுத்திருந்தால், ஆண்டுக்கு 76,000 உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம் என்று ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மாசுக்கட்டுப்பாட்டு கருவி பயன்படுத்தாத நிலையங்கள்
இந்தக் காலகட்டத்தை மொத்தம் 10 ஆண்டுகளாக நீட்டித்ததன் விளைவாக அனல் மின் நிலையங்கள் தொடர்ந்து நச்சு வாயுக்களை வெளியேற்றி மனித ஆரோக்கியத்தையும் சுற்றுச்சூழலையும் பாதிக்கிறது. இந்தப் பத்தாண்டுகளில் உமிழ்வைக் குறைப்பதற்கான FGD சாதனத்தைப் பொருத்துவதில் எவ்வித முன்னேற்றம் இல்லை. தமிழ்நாடு அரசு, என்எல்சியால் இயக்கப்படும் ஒரு அனல் மின் நிலையம் கூட மாசு உமிழ்வைக் குறைக்க எஃப்ஜிடி கருவிகளை நிறுவ ஒரு டெண்டர்கூட விடவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது.
நெய்வேலி, சென்னை, தூத்துக்குடி, மேட்டூர் ஆகிய இடங்கள் நிலக்கரி அதிகம் எரியும் பகுதிகள். உலகில் நிலக்கரி எரியும் முதல் 50 இடங்களில் நெய்வேலியும் சென்னையும் உள்ளன. இந்தப் பகுதிகளில் செயல்படும் அனல் மின் நிலையங்களில் இருந்து வெளியேறும் உமிழ்வைக் கண்காணிப்பது குறித்தும் ஆய்வு குறிப்பிடுகிறது.
மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆன்லைன் தொடர்ச்சியான உமிழ்வு கண்காணிப்பு அமைப்பின் (OCEMS) இணையதளத்தில் வழங்கப்பட்ட தரவுகளுக்கும் ஏப்ரல், மே, ஜூன் 2021இல் பெறப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் கிடைக்கும் தரவுகளுக்கும் இடையே குறிப்பிடத்தக்க முரண்பாடுகள் உள்ளன.