வேலூர்: குப்பாத்தா மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் சத்தீஷ்குமார் (20). இவர் வேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் ஆர்த்தோ டெக்னீசியன் 4ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த யாசினி (18) என்ற பெண் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் மெடிக்கல் ரெக்காட்ஸ் படித்து வந்தார்.
இவர்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், இது தொடர்பாக சத்தீஷ்குமார் வீட்டார் பெண் கேட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது. மேலும், அந்த பெண் வேறு ஒருவரை காதலிப்பதாக சத்தீஷ்குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று (ஜூலை 6) காலை இருவரும் கல்லூரி செல்வதற்காக திருவலம் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளனர்.
அப்போது அருகில் இருந்த பிள்ளையார் கோயில் எதிரே நின்று பேசிக்கொண்டிருக்கும்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியநிலையில், சத்தீஷ்குமார் ஆத்திரத்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்த பெண்ணை திடீரென கழுத்தில் குத்தினார்.
இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த அந்த பெண், ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வேலூரில் உள்ள சிஎம்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண்ணிற்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவலம் காவல் துறையினர் இளம்பெண்ணை கத்தியால் குத்திய கல்லூரி மாணவன் சத்தீஷ்குமாரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இருவருக்கும் ஏற்கனவே, ரகசிய திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: இயக்குநர் லீனா மணிமேகலைக்கு கொலை மிரட்டல் - அதிர்ச்சி வீடியோ