புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களும், மருத்துவமனைகளும் அமைந்துள்ள நகரம் வேலூர். அதற்கேற்றாற்போல் போக்குவரத்து நெரிசலும் இங்கு அதிகமாகியுள்ளது. பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலைக்கு மத்தியில் இருப்பதால் இங்கு வாகன ஓட்டிகள் பெரும்பாலும் சர்விஸ் சாலையையே பயன்படுத்துகின்றனர். மேலும், இச்சாலைகள் இரு வழிப்பாதையாக இயங்குவதால் பாதசாரிகள் மிகுந்த அச்சத்துடனேயே சாலையை கடக்க வேண்டியிருக்கிறது.
கடந்த ஆண்டில் மட்டும் இம்மாவட்டத்தில் 334 பேர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர். அதுவும் சாலையை கடக்கும் போது ஏற்படக்கூடிய மரணங்கள் சத்துவாச்சாரி தேசிய நெடுஞ்சாலையில்தான் அதிகம். அங்கு பாதசாரிகள் சாலையை கடப்பதற்கென தனியாக பாதையோ, சிக்னலோ இல்லாதது தான் முக்கிய காரணம். இங்கு மட்டுமல்லாமல், சித்தூர் பேருந்து நிலைய சந்திப்பு, அண்ணா கலையரங்கம் சிக்னல், காட்பாடி காந்தி நகர் சிக்னல், வேலூர் கோட்டை மக்கான் சிக்னல், கிரீன் சர்கில் போன்ற இடங்களிலும் இதே நிலைதான்.
சிஎம்சி மருத்துவமனையின் இரண்டு பிரதான வாயில்கள் அமைந்துள்ள ஆர்காடு சாலையில், சிகிச்சை முடிந்து வெளியே செல்லும் நோயாளிகள், உயிரை கையில் பிடித்துக்கொண்டே செல்ல வேண்டியுள்ளது. வேலூர்-காட்பாடி சாலையில் சுமார் 6 கிராசிங்கள் உள்ளன. இதில் சிக்னல் பொருத்தப்பட்டிருந்தாலும், பாதசாரிகளுக்கான பிரத்யேக சிக்னல் என்பது கிடையாது.