வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி வரும் 18ஆம் தேதி வரை பெறப்படுகிறது. முதல் நாளான இன்று வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளியைச் சேர்ந்த மணி(எ) மனிதன் என்பவர் வித்தியாசமான முறையில் பின்னால் திரும்பி நடந்தபடியே வந்து வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
வித்தியாசமான பாணியில் வேட்புமனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளார்! - மக்களவை தேர்தல்
வேலூர்: சுயேட்சை வேட்பாளர் ஒருவர், பின்புறம் நோக்கி நடந்தபடியே வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
குர்தா போன்ற உடை அணிந்திருந்த அவர் பின்புறமாக திரும்பி நடந்தபடியே சென்றதை கவனித்து அங்கிருந்த காவலர்கள், பொதுமக்கள் கண்ணிமைக்காமல் வேடிக்கை பார்த்தனர். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, "இந்தியா தற்போது பல்வேறு காரணங்களால் தலைகுனிவு ஏற்பட்டுள்ளது எனவே இந்தியா தலைநிமிரும் வரை நான் இதுபோன்று பின்புறம் நோக்கி நடந்தபடியே வந்துதான் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளேன்" என்றார்.
இதேபோல் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த காந்தியவாதி ரமேஷ், காந்தி வேடம் அணிந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இவ்வாறு வேலூர் தொகுதியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுயேட்சை வேட்பாளர்கள் அதிகளவில் மனு தாக்கல் செய்துவருகின்றனர்.