ஆண்டுதோறும் அரசு சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்படுகிறது. அதனடிப்படையில் "விபத்தில்லா தமிழகம்" என்ற இலக்கை நோக்கி நடைபெறும் இந்த 31ஆவது சாலை பாதுகாப்பு வார விழா கடந்த 20ஆம் தேதி முதல் வருகிற 27ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதில் ஒவ்வொரு நாளும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனிடையே திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை சார்பில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு வார விழாவின் சிறப்பு பொது மருத்துவ முகாமினை அமைச்சர்கள் கே.சி. வீரமணி, நிலோபர் கபீல் மற்றும் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் நிலோபர் கபீல், 'விபத்துகளை தவிர்க்க நிதானமாக வாகனத்தில் செல்ல வேண்டும்' என்றார். அவரைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் கே.சி. வீரமணி, 'இளைஞர்கள் தங்களின் எதிர்காலம், குடும்பம் உள்ளிட்டவற்றை மனதில் வைத்துக்கொண்டு அதிவேகமாக பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்' என அறிவுரை கூறினார்.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி காவல் துறையினர் சார்பில் நடத்தப்பட்டது. இதில் தலைக்கவசத்தின் அவசியத்தை பொதுமக்களுக்கு உணர்த்திடும் வகையில், செல்போன் பேசிக்கொண்டே இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்ற இளைஞரை, எமன் வேடமிட்ட ஒருவர் அவரது இருசக்கர வாகனத்துக்குப் பின்னால் அமர்ந்து பாசக்கயிற்றால் அந்த நபரின் உயிரை பறிப்பதுபோன்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது.